சடலத்தை புதைப்பதிலும் சாதியா? பொதுவான மயானத்தை உருவாக்குங்கள்!-உயர் நீதிமன்றம் ஆதங்கம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவகுறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்கும்படி அருகில் உள்ள நில உரிமையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தொடரப்பட்ட அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர்கள் என அனைத்து பிரிவினருக்கும் தனித்தனி மயானங்கள் உள்ள நிலையில், வண்டிப்பாதையில் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடலை தோண்டி எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
image
இந்த உத்தரவை எதிர்த்து முத்துசாமி, அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் சாதிய கட்டுக்களை உடைத்தெறிய முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளது.
image
மதச்சார்பற்ற அரசும், சாதிய ரீதியாக தனித்தனி மயானங்களை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடியுள்ள நிலையில், ஒரு மனிதன், படைத்தவனை நோக்கிய பயணத்தின் போதாவது சமத்துவத்தை துவங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றி, மாற்றத்தை அரசு துவங்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.