டெய்சி, சூர்யா சிவா.. 3 மணி நேரத்தில் பஞ்சாயத்து கிளியர்!

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தற்போது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக உள்ளார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக உள்ள டெய்சி சரண் என்பவரை ஆபாசமாக பேசியும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா சிவா பேசி உள்ள ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆடியோவில் சூர்யா சிவா, ‘மாவட்ட பொறுப்பில் மைனாரிட்டிய போட முடியாமல் இவ்வளவு தாண்டுகிறாயே.. 68 சதவீத ஓபிசியை வச்சுக்கிட்டு… நாளைக்கு எனது சாதிக்காரனை நான் ஏவி விடுறேன். நீ ஊர் தாண்ட முடியாது. வீடு புகுந்து, உன்னை வெட்டிப்புடுவேன்’ என, சூர்யா சிவா கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சூர்யா சிவா தொடர்ந்து பேசும்போது, ‘நீ..அண்ணாமலை கிட்ட போய்க்கோ. ஜே.பி.நட்டா, அமித்ஷா, மோடி யார்கிட்ட வேணாலும் போய்க்கோ. திமுகவுலயே நான் ரவுடியுசம் பண்ணிட்டு வந்தவன்’ என, கடுமையாக பேசி உள்ளார்.

பாஜகவில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவா, டெய்சி சரண் ஆகியோருக்கு இடையே நடந்து வந்த மோதல் இந்த ஆடியோ மூலம் அம்பலமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், ‘ சொந்தக் கட்சி பெண்களை ஏன் தாக்க வேண்டும். இந்த கழுதைப்புலிகளை வைத்து அழகு பார்க்க கட்சியின் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு’ என கூறி இருந்தார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில், தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் பாஜகவில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்துக்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

மேலும் அண்ணாமலை, ‘தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் குறித்த தகவல் என் கவனத்துக்கு வந்தது.

இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில துணை தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான கனக சபாபதிக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க திருப்பூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் விசாரணை கமிட்டி முன்பாக இன்று ஆஜராகினர்.

இவர்களிடம் பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் அடங்கிய குழு டெய்சி சரண் மற்றும் சூர்யா சிவா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை இருவரிடமும் தனித்தனியாக சுமார் 3 மணி நேரத்துக்கு நடந்தது. இந்த விசாரணையின் அறிக்கை தலைமைக்கு அனுப்பப்படும் என, விசாரணை கமிட்டி தெரிவித்தது.

அதே சமயம் டெய்சி, சூர்யா சிவா இடையே நடத்தப்பட்ட விசாரணையின் போது இருவரிடையே சமரசம் செய்து வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக வெளியுலகுக்கு யாரும் தகவல் அளிக்க கூடாது எனவும், கட்சி தலைமை நிபந்தனை போட்டு அனுப்பி வைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ‘சூர்யா..என் தம்பி மாதிரி’ என டெய்சி பேட்டு அளித்துள்ளது அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா…என பேசும் அளவுக்கு உள்ளதாக பலரும் கருத்து பதிவு செய்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.