தமிழக அரசு எழுத்துப்பூர்வ அறிக்கை ஜல்லிக்கட்டு எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: ‘ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து தமிழக அரசு ஜனாதிபதி ஒப்புதலோடு புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி மீண்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உட்பட 50க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பினரும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், எழுத்துப்பூர்வ வாதங்கள் தொடர்பான அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த சட்ட விதி மீறல்களும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு விவகாரத்தில் தமிழக சட்டபேரவையில் உருவாக்கப்பட்ட சிறப்பு சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் இடம்பெறும் காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படுவது கிடையாது. இது மிகவும் குறைவான தூரத்தில் தான் அதாவது 15 மீட்டர் இடைவெளியில் தான் இந்த விளையாட்டு நடக்கிறது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்பதால் இதனை கிராமங்கள் முதல் உட்கிராமங்கள் வரையில் ஒரு கலாச்சார விளையாட்டாக பின்பற்றி வருகிறோம். குறிப்பாக ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த சிறப்பு சட்டமானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. சுமார் 5000 ஆண்டு பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருக்கிறது.

இந்த விளையாட்டில் புலிக்குளம், காங்கேயம் போன்ற தனித்துவம் வாய்ந்த காளைகள் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஜல்லிகட்டு வழக்கானது விசாரணைக்கு வரும்போது இந்த எழுத்துப்பூவ வாதத்தின் அறிக்கையை நீதிபதிகள் பரிசீலனையாக எடுத்துக்கொண்டு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.