'முன்பே சவக்குழி தோண்டி வைத்தேன்' கர்ப்பிணி மனைவியைக் கொன்று காட்டில் புதைத்த கணவன்


கர்நாடகாவில் கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டு கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் கர்நாடகாவில், தாவணகெரே மாவட்டத்தில், 6 மாத கர்ப்பிணி மனைவியைக் கொன்று, அவரது உடலை காட்டில் புதைத்ததாகக் கூறப்படும் நபரை பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.

தாவணகெரே அருகே சன்னகிரி அருகே உள்ள கங்கொண்டனஹள்ளியை சேர்ந்தவர் மோகன் குமார் (25). அவர் கடந்த ஆண்டு சந்திரகலா என்கிற ரஷ்மியை (21) திருமணம் செய்துகொண்டார்.

சித்திரவதை

IANS

ஆரம்ப நாட்களில் இருந்தே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மோகன்குமார் சந்திரகலாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார், தனது மனைவி யாரிடமும் பேசுவதையும் வெறுத்தார். மேலும் அவரை வரதட்சணை தரும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சந்திரகலா மற்றவர்களிடம் பேசும் போதெல்லாம், மோகன் அவரை விசாரித்து, அவருக்கு தவறான உறவுகள் இருப்பதாக குற்றம் சாட்டிவந்துள்ளார். சித்திரவதை தாங்க முடியாமல் சந்திரகலா தனது பெற்றோருக்கு திருட்டுத்தனமாக அடிக்கடி போன் செய்து பேசி வந்துள்ளார்.

பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார், ஆனால் அவர்கள் அப்பெண்ணை திருப்பி அனுப்பியுள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் மோகன்குமார், மனைவியுடனான தகராறில் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், சிக்கமகளூர் மாவட்டம் அஜ்ஜாம்புரா அருகே உள்ள ஹுனகட்டா வனப் பகுதிக்கு சடலத்தை எடுத்துச் சென்று புதைத்துள்ளார். அப்போது, கொலை செய்யப்பட்ட சந்திரகலா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

மனைவி காணவில்லை என புகார்

பின்னர் சந்திரகலா காணாமல் போனதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்த அவர், அவர் யாரோ ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறி அக்டோபர் 10-ஆம் திகதி பொலிஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சந்திரகலாவின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் சென்று, மருமகனால் தங்கள் மகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறினார்.

பொலிஸ் விசாரணையில்..

காணாமல்போன தினத்தன்று, மோகன் தனது காரை எடுத்துக்கொண்டு அதிகாலை 2 மணியளவில் வெளியில் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, ​​அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அதிகாரிகள் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் மோகன், ஒரு மாதத்திற்கு முன்பே தனது மனைவியை கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அவர் உடலை அப்புறப்படுத்துவது மற்றும் அனைத்து ஆதாரங்களையும் அழிப்பது குறித்தும் திட்டமிட்டுவந்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில், மனைவியை புதைக்க காட்டில் முன்கூட்டியே குழி தோண்டி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.