ரவீந்திர ஜடேஜாவின் அக்கா Vs மனைவி… குஜராத் ஜாம்நகர் தொகுதியில் வெல்லப்போவது யார்?!

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என நாட்டின் மிக முக்கியத் தலைவர்கள் குஜராத்தில் முகாமிட்டிருக்கின்றனர். தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சூடுபிடித்திருக்கும் குஜராத் தேர்தல் களத்தில், ஸ்டார் வேட்பாளராக மாறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா. ஜாம்நகர் (வடக்கு) தொகுதியில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?

2019-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்த ரிவாபா ஜடேஜா, தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல்முறை. ஜாம்நகர் வடக்கிலுள்ள முக்கியப் பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்துவருகிறார் ரிவாபா. சில இடங்களுக்கு கணவர் ரவீந்திர ஜடேஜாவுடம் உடன் செல்கிறார். ஷத்ரியா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தச் சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் மட்டும் ரிவாபாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ரிவாபாவுக்கு, ஜாம்நகரில் சீட் ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ரவீந்திர ஜடேஜாவின் மனைவி என்பது மட்டுமே அந்தப் பகுதி மக்களிடம் ரிவாபாவுக்கு அடையாளமாக இருக்கிறது.

ரிவாபாவுக்கு எதிராக அவரின் அண்ணி, அதாவது ஜடேஜாவின் அக்கா நைனாபா ஜடேஜா பிரசாரம் செய்துவருகிறார். நைனாபா ஜடேஜா, குஜராத் காங்கிரஸின் மகளிரணித் தலைவராக இருந்துவருகிறார். ஜாம்நகர் வடக்கு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிபேந்திரசிங் ஜடேஜாவுக்கு ஆதரவாக நைனபா வாக்குகளை சேகரித்துவருகிறார்.

அமித்ஷாவுடன் ரிவாபா – ஜடேஜா, குஜராத் தேர்தல்

மேலும், “அனுதாபத்தைத் தேடுவதற்காகப் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார் ரிவாபா. இது ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளர் முறைதான். காங்கிரஸ் சார்பாக இந்த விவகாரம் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவரின் அதிகாரப்பூர்வ பெயர் ரிவா சிங் ஹர்தேவ் சிங் சோலங்கி என்பதுதான். ஆனால், ஜடேஜா எனும் குடும்பப்பெயரை பயன்படுத்துவதற்காக அடைப்புக்குறிக்குள் வைத்திருக்கிறார்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் நைனபா.

`நைனா உங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறாரே?’ என்று ரிவாபாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்க, “எங்களுடைய சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருக்கிறது. ஆனால், எங்கள் இருவருக்கிடையிலும் தனிப்பட்ட சண்டை எதுவுமில்லை. இதெல்லாம் வீட்டுக்கு வெளியில் மட்டும்தான்” என்று கூறியிருக்கிறார்.

வெற்றி வாய்ப்பு?

கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட தர்மேந்திசிங் ஜடேஜா சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவரான தர்மேந்திரசிங்-க்கு வாய்ப்பளிக்காமல் வெளியிலிருந்து வந்த ரிவாபாவுக்கு வாய்ப்பளித்து கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. ரிவாபாவுக்கு ஆதரவாக தர்மேந்திரசிங் பெயரளவுக்கு மட்டுமே பிரசாரம் மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் வேட்பாளரான பிபேந்திரசிங் ஜடேஜாவும் அந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படுகிறார். “32 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். மற்றவர்கள் வெல்வதற்காகத் தேர்தலில் அவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவந்த நான் முதன்முறையாக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். ரிவாபா வெளியிலிருந்து வந்தவர் என்பதே எனக்கு பலம். நான் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவன். மேலும், நைனாபா ஜடேஜாவும் எனக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வதால் நிச்சயம் வெற்றிபெறுவேன்” என்கிறார் பிபேந்திரசிங். பா.ஜ.க-விலிருந்து வெளியேறிய கர்சன் கர்முர் (Karsan Karmur), ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுகிறார். எனவே, அவர் பா.ஜ.க வாக்குகளைப் பிரிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

பிரதமர் மோடி,ரவீந்திர ஜடேஜா, ரிவாபா

“ரிவாபாவுக்கு என தனிப்பட்ட செல்வாக்கு எதுவுமில்லை. கட்சிக்குள்ளும் அவருக்குப் பெரிய ஆதரவில்லை. மோடியின் இமேஜ் மட்டுமே அவருக்கான ப்ளஸ். ஜாம்நகர் வடக்கு தொகுதியில், அதிக அளவில் இளைஞர்களின் வாக்குகள் இருக்கின்றன. எனவே, பா.ஜ.க மீதிருக்கும் அதிருப்தியில் அவர்கள் காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் வாக்களிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இந்தத் தொகுதியில் யார் வெற்றிபெறுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள் குஜராத் அரசியல் நோக்கர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.