‘எமோஷனல் காட்சியில் சிரிப்பு, காதல் காட்சியில் முறைப்பு’-'பட்டத்து அரசன்' எப்படி இருக்கு?

ஊருக்கும், ஊர் ஒதுக்கும் குடும்பத்துக்கும் நடக்கும் கபடி போட்டியில் என்ன நடக்கிறது என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஒன்லைன்.

ஊரிலேயே பெரிய தலைக்கட்டு பொத்தாரியாக வரும் ராஜ்கிரண். சொத்து பத்து எதுவும் பெரிதாக இல்லையென்றாலும், முதல் மரியாதை ராஜ்கிரண் வகையறாவுக்குத்தான். எதுவும் இல்லாதவருக்கு ஓவர் மரியாதை தரப்பட்டால் நிச்சயம் ஒரு குடும்பத்துக்கு ஆகாது தானே, அதற்கெனவே தைத்த சட்டை போல ஒரு குடும்பம் மூன்று தலைமுறையாய் காத்துக்கிடக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 1 ராஜ்கிரணின் பேரன் என்றாலும், டிஸ்லைக் பட்டியலில் இருக்கிறார் அதர்வா. அதர்வாவை ராஜ்கிரணின் மொத்தக் குடும்பமுமே வெறுப்பதற்கான காரணமாய் இருக்கிறார் அதர்வாவின் தாயார் ராதிகா. இதற்கென ஒரு பிரத்யேக ஃபிளாஷ்பேக் நமக்குக் காட்டப்படுகிறது.

ஃபிளாஷ்பேக் நம்பர் 2 அதர்வாவுக்கு பேருந்தில் தூங்கிக்கொண்டிருக்கும் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தைக் கண்டதும் காதல். பேருந்திலேயே லைட்டாக ஸ்டாக்கிங் செய்து கவிதை எல்லாம் வாசிக்க, பின்பு இவர்கள் இருவருக்குமே ஒரு பிணைப்பு இருக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 3. நல்லபேரை சம்பாதித்தாலும், பணம் இல்லாததால் சிக்கலில் தவிக்கும் ராஜ்கிரண் குடும்பத்துக்கு சோதனை வரிசைகட்டி நிற்க, அதர்வா உதவ முயல, அதைக் குடும்பம் எதிர்க்க, வேறு வழியின்றி ராஜ்கிரணின் இன்னொரு பேரன் வட்டிக்குப் பணம் வாங்க, அது பிரச்னையில் போய் முடிய, நடித்தவர்களைத் தவிர பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த திருப்பம் நடைபெற, குடும்பே திக்குமுக்காடிப் போய்விடுகிறது. அந்த மானப் பிரச்னையில் இருந்து ராஜ்கிரண் குடும்பம் தப்பித்ததா என்பதுதான் மீதிக்கதை.

image

மூன்று கெட்டப்களில் வரும் ராஜ்கிரணும், என்ன வேடம் என்றாலும் தன் பங்கை சரியாய் செய்துவிட வேண்டும் என்கிற பிரயத்தனம் கொண்டிருக்கும் ராதிகா மட்டுமே படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிங்கம்புலி ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறார். பாலசரவணனுக்கு அந்த வாய்ப்பையும் இயக்குநர் வழங்கவில்லை. மீனாள் சகோதரிகளுக்கு நல்ல வேடம் என்றாலும், வில்லத்தனமாய் ஒரு வசனத்தை ஏனோ வைத்திருக்கிறார்கள். படத்தின் ஒரே ஆறுதல் ஆர்.கே.சுரேஷுக்கு பாசிட்டிவான ரோல் கொடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் போக ஜெயப்பிரகாஷ், ராஜ் ஐயப்பன், துரை சுதாகர், GM குமார், ரவிகாலே, சத்ரு என பலர் நடித்திருக்கிறார்கள். குடும்பத்துக்கும் ஊருக்கும் நடக்கும் கபடி சண்டை என்கிற வரையில் சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். ஆனால், அதையொட்டி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை முழுக்க முழுக்க வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. இதுவொரு உண்மைக்கதை என இறுதியில் சொல்லப்பட்டாலும், படத்தில் நம்பும்படி பல காட்சிகள் இல்லை என்பதுதான் துயரம். படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள்கூட சிரிப்பை வரவழைக்கும் எண்ணம் எடுத்திருப்பதற்கு மிகப்பெரிய சாமர்த்தியம் வேண்டும்.

image

எமோஷனல் காட்சியில் சிரிப்புமூட்டுவது, காதல் காட்சியில் முறைக்க வைப்பது என எல்லாமே உல்ட்டாவாக இருக்கிறது. ‘களவாணி’யில் மண் சார்ந்த விஷயங்களை அவ்வளவு யதார்த்தமாய் பதிவு செய்திருந்த சற்குணம் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. உண்மையில் தமிழ் சினிமா படைப்பாளிகள் எந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விளையாட்டுக்குள் மானத்தை வைப்பது; தோற்கும் ஊருக்குச் சென்று பக்கத்து ஊர்க்காரர்கள் ஒட்டுமொத்தமாய் ‘ஆம்பிளைகளே இல்லையா எனக் கேட்பது’ , ஆட்டத்துக்கு ஆள் பத்தவில்லை என்றால் தாலி கட்டி மனைவி ஆக்குவது என பிற்போக்குத்தனத்தில் உச்சமாக இருக்கிறது படத்தின் பெரும்பான்மையான காட்சிகள். ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் மட்டும் செம்ம. பின்னணி இசையும் மற்ற பாடல்களும் சொதப்பல். கபடிக் காட்சிகள் லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

மொத்தத்தில் பிற்போக்குத்தனங்களின் அரசனாக மட்டுமே எஞ்சி நிற்கிறது இந்த ‘பட்டத்து அரசன்’.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.