பிரான்சின் ஷாம்பெயின் நகரில் உள்ள புளூவாட்டர் ஏரியில் 30 கிலோ எடையுள்ள ராட்சத தங்கமீனை பிரிட்டன் மீன்பிடி வீரரான ஆண்டி ஹாக்கெட் என்பவர் பிடித்துள்ளார்.
கோல்டு பிஷ் பெரும்பாலும் வீடுகளில் கண்காட்சிகளில் அழகுக்காக சிறு தொட்டிகளில், கண்ணாடி பாட்டில்களில் வளர்க்கப்படுவது வழக்கம். ஆனால் 30 கிலோவுக்கும் அதிக எடைகொண்ட `கோல்ட் பிஷ்’ பார்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆண்டி ஹாக்கெட், புளூவாட்டர் ஏரியில் வழக்கம் போல மீன்பிடிக்க சென்றுள்ளார். இதற்கு முன்பும் பலமுறை இந்த மீனை பார்த்ததுண்டு, ஆனால் பிடிக்க முயன்றும் இந்த மீன் சிக்காமல் நழுவி வந்தது. அன்று அதிர்ஷ்டவசமாக இந்த மீன் பிடிபட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். இந்த மீன் ஆரஞ்சு நிறத்தைக் கொண்டது. சுமார் 30. 5 கிலோ எடை கொண்டது. இந்த மீனின் செல்லப் பெயர் காரட்.
இது குறித்து மீனவர் ஆண்டி ஹாக்கெட் கூறியதாவது, “முதலில் இது இவ்வளவு பெரிய மீன் என எனக்கு தெரியாது. தூண்டிலில் மீன் பிடிக்கும்போது அங்குமிங்கும், மேலும் கீழும் ஓடிக்கொண்டிருக்கும். சுமார் 30 முதல் 40 அடி உயரம் வரை மேல எழும்பிய போது தான் பார்த்தேன். வியப்பாக இருந்தது. அதனை பிடிப்பதும் சுவாரஸ்யமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
புளூவாட்டர் லேக்ஸ் தனது முகநூலில் இந்த புகைப்படத்தை பதிவிட்டதிலிருந்து ஏராளமான லைக், ஷேர், கமெண்ட்ஸ் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

நெட்டிசன்கள் அழகான மீனைக் கண்டு வியப்படைந்தனர் மற்றும் அதன் நீண்ட ஆயுள் குறித்து சந்தேகத்துடன் கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளித்த மீன்வள அதிகாரிகள், தங்கமீன்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன என்றும், கேரட் தற்போது 20 வயதுக்கு மேல் உள்ளதாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
“என்ன ஒரு அழகான மீன், ஆச்சரியமாக இருக்கிறது.”
“இதற்கு கேரட் என பெயர் வையுங்கள்”,
“அந்த மனிதரை விட மீன் சற்று பெரியதாக உள்ளது”,
“30 கிலோ எடை கொண்ட கேரட்.. அருமை..!” என நிறைய கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. வலைதளங்களில் இந்த போட்டோ அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
“கேரட் உள்ளே இருப்பதை முன்பே அறிந்தேன், ஆனால் நான் அதைப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய மீனவர் ஆண்டி ஹாக்கெட், பிடிபட்ட இந்த கம்பீரமான அரியவகை உயிரினத்தை மீண்டும் தண்ணீரில் விட்டார். அவரது செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.