சலாம் ரஹ்மான் பாய்… மும்பையில் பிரமித்த ஐஸ்வர்யா

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். படம் அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த ஐஸ்வர்யா பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்தச் சூழலில் தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். அதுகுறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது  ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். 

இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை கடந்த 5ஆம் தேதி நடந்தது.

இந்நிலையில் லால் சலாம் படத்துக்கான இசை பணிகளை ரஹ்மான் தொடங்கியுள்ளார். அதுதொடர்பான வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் ரஹ்மானின் இசையை கேட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருக்கு சலாம் செய்கிறார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.