யாருப்பா நீங்கல்லாம்..? உடலில் அதிக மாற்றங்களைச் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்த தம்பதி!

பல திறமைகளையும், விநோதமான மனிதர்களையும் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது, கின்னஸ் உலக சாதனை. அந்த வகையில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியேலா மற்றும் விக்டர் ஹ்யூகோ பெரால்டா தம்பதியினர், உடலில் அதிக மாற்றங்களைச் செய்துகொண்டதற்காக கின்னஸ் உலக சாதனையாக அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தங்களுடைய உடலில் இருவரும் 98 டாட்டூக்கள் மற்றும் 50 துளைகள், சருமத்தில் வைக்கப்படும் 8 மைக்ரோ டெர்மல்கள், 14 பாடி இம்பிளான்ட்கள், 5 டென்டல் இம்பிளான்ட்கள், 4 இயர் எக்ஸ்பாண்டர்கள், 2 இயர் போல்ட்கள் மற்றும் நாக்கு பிளவுபடுத்தலையும் மேற்கொண்டுள்ளனர்.

கேட்பதற்கே வியப்பாக இருந்தாலும், 2014-ம் ஆண்டிலேயே இவர்கள்  84 விதமான உடல் மாற்றங்களுடன் சாதனை படைத்துள்ளனர். இருப்பினும், தொடர்ந்து உடல் மாற்றங்களைச் செய்து தங்களுடைய சாதனையை தாங்களே முறியடித்துள்ளனர். 

இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை தெரிவிக்கையில், `சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸில் நடந்த மோட்டார் சைக்கிள் போட்டியில் கேப்ரியேலாவும் விக்டரும் ஒருவரையொருவர் சந்தித்து காதல் வயப்பட்டனர்.

உடல் மாற்றங்கள் மற்றும் இம்பிளான்ட்கள் மீதான ஆர்வத்தோடு தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவற்றில் சில, மிகவும் வலிநிறைந்தது என அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

இச்சாதனை குறித்து விக்டர் கூறுகையில், “வாழ்க்கையை ரசியுங்கள். கலையை ரசியுங்கள். டாட்டூக்கள் உங்களை நல்லவராகவோ கெட்டவராகவோ காட்டாது. அது ஒரு கலை. அதைப் பாராட்டுபவர்களும் இருப்பார்கள், பாராட்டாதவர்களும் இருப்பார்கள். 

என்னைப் பொறுத்தவரை, உடல் மீதான அன்பிற்காக வாழ்க்கை எனக்குக் கொடுத்த பரிசு தான் கின்னஸ் உலக சாதனை. 20 நாடுகளுக்குப் பயணம் செய்து, பல கலாசாரங்களை அறிந்து, புதிய நட்பை உலகம் முழுதும் வளர்த்து, எனது பெரிய கனவுகளில் ஒன்றை அடைய  இந்தச் சாதனை எனக்கு உதவியதால், நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’’ என்று தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தி உள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.