திருச்சியைச் சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள 13 ரவுடிகளை சந்தேகத்திற்குரியவர்கள் என்று கருதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை விரைவில் நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையில் உடனுக்குடன் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. திருச்சியை சேர்ந்த கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ராமஜெயம் மிகுந்த ஆர்வம் கொண்டதால் கடந்த 2006ம் ஆண்டு திருச்சி லீக் எனும் பெயரில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் போட்டி நடத்த ஆசைப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் பேசி இரு தரப்பினரும் இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். ராமஜெயம் விரும்பிய அணிகளை திருச்சி கிரிக்கெட் சங்கம் போட்டியில் விளையாட அனுமதிக்கவில்லை என தெரிவி வந்துள்ளது.
இதன் காரணமாக போட்டியை நடத்த பல தடைகள் ஏற்பட்டதால் இறுதியில் போட்டிய முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக ராமஜெயத்திற்கும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் ராமஜெயத்திற்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை நடந்தது என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.