'வாரிசு' கதாநாயகி ராஷ்மிகாவுக்குத் தடை என பரப்பும் ரசிகர்கள்

விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாக தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டது. அதன் பிறகு பேச்சு வார்தை நடத்தி அதைச் சரி செய்தார்கள். இந்நிலையில் தமிழ்ப் படங்களின் முக்கிய வெளியீட்டு ஏரியாவான கர்நாடகாவில் 'வாரிசு' படத்திற்கு வேறுவிதமான மறைமுகத் தடையை ஏற்படுத்த சிலர் முயன்று வருவதாகச் சொல்கிறார்கள்.

'வாரிசு' படத்தில் கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று புதிய சர்ச்சையை ஆரம்பித்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கன்னடத்தில் அறிமுகமான 'கிர்க் பார்ட்டி' படம் பற்றி பேசும் போது அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. மேலும், 'கிர்க் பார்ட்டி' படத்தில் ராஷ்மிகாவைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய ரிஷப் ஷெட்டி இயக்கி சமீபத்தில் வெளிவந்த 'காந்தாரா' படம் பற்றி ராஷ்மிகா எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இதனால், கன்னட சினிமா ரசிகர்கள் ஆத்திரமடைந்து கடந்த சில நாட்களாக ராஷ்மிகாவுக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், ராஷ்மிகாவுக்கு கன்னட சினிமா உலகம் தடை போடும் முடிவில் உள்ளது என்றும் கூறி வருகிறார்கள். இதனால், கர்நாடகாவில் 'வாரிசு' பட வெளியீட்டிற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது என்றும் பரப்புகிறார்கள்.

ஒரு காலத்தில் கன்னட சினிமா தவிர மற்ற மொழிப் படங்களை கர்நாடகாவில் டப்பிங் செய்து வெளியிட தடை விதித்திருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு அந்தத் தடை நீதிமன்ற வழக்கால் விலகியது. அதன் பின்பே கன்னட சினிமாவானா 'கேஜிஎப், காந்தாரா' ஆகிய படங்கள் இந்திய அளவில் வசூலைக் குவித்தது. இப்போது பல கன்னடத் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளிவருகிறது.

ராஷ்மிகா மீது மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் வைக்கிறார்கள். அவர் எந்த மேடையிலும் கன்னடத்தில் பேச முயற்சிக்க மாட்டார். கன்னடத்தில் பேசுவது கஷ்டம் என்று சொல்பவர், தெலுங்கு, தமிழ்ப் பட விழாக்களில் அந்தந்த மொழிகளில் பேசுவார். அடுத்து, ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பத்மஸ்ரீ விருது பெற்ற 'சாலுமராடா திம்மக்கா' பற்றி ஒரு மேடையில் பேச அவர் மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் திம்மக்கா கன்னடத்தில் பேசியதை தமிழில் மொழி பெயர்த்தவரே ராஷ்மிகா தான்.

ராஷ்மிகா மீது திடீரென இப்படி கன்னட சினிமா ரசிகர்கள் எதிர்மறை கருத்துக்களைப் பதிவு செய்வதன் பின்னணியில் வேறு ஏதோ இருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். அதற்கு சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம்.

கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் திருமணம் நிச்சயமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் திடீரென பிரபலமானதால் அந்த நிச்சயத்தை ரத்து செய்துவிட்டார் ராஷ்மிகா. தற்போது தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொன்டாவைக் காதலித்து வருகிறார் என்று தகவல். மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் கவனம் செலுத்துபவர் கன்னட சினிமாவை மறந்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் கன்னட ரசிகர்கள்.

இது குறித்து விசாரித்த போது, எந்த ஒரு சங்கமும் யாரையும் தடை போட முடியாது என்பது தெரியாமல் பலரும் இப்படிப் பதிவிடுவது ஆச்சரியமாக உள்ளது என சில மூத்த சினிமா தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படி ஒரு தடை என எந்த சங்கமாவது அறிவித்தால் ராஷ்மிகா அவர்கள் மீது வழக்கு தொடுக்க முழு உரிமை உண்டு என்கிறார்கள். இந்திய அளவில் தற்போது பான் இந்தியா வெளியீடு என்பது வந்துவிட்ட பிறகு குறுகிய அளவில் இப்படி தடை எனச் சொன்னால் அது கன்னட சினிமாவையும் சேர்ந்தே பாதிக்கும் என்பதே அனுபவஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.