திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 15 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட முருகர் தேர் வெள்ளோட்டம் சிறப்பு பூஜை செய்து நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகர் தேரை வடம் பிடித்து கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் திருக்கோவிலில் நான்கு மாட விதிகளை சுற்றி இழுத்து வழிபட்டு வருகின்றனர்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா நாளை காலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பத்து நாட்களும் காலையில் விநாயகர் சந்திரசேகரும், இரவு விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் தனித்தனியே எழுந்தருளி திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்கள் காட்சி அளிக்க உள்ளனர்.
முக்கிய திருவிழாவாக கருதப்படும் ஏழாம் நாள் திருவிழா அன்று விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மரத்தேரில் ஏந்தருளியடி திருக்கோவில் நான்கு மாட விதிகளை சுற்றி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்து வழிடுவார்கள். தேர் திருவிழாவை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள்.
அந்த வகையில் ஏழாம் நாள் திருவிழா அன்று வலம் வரக்கூடிய முருகர் தேர் பழுது ஏற்பட்டு புதுப்பிக்கும் பணி ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று தற்போது முடிவடைந்த நிலையில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் முருகர் தேருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் நான்கு மாட வீதிகளை சுற்றி முருகர் தேரினை வடம் பிடித்து ‘கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கரகோசத்துடன் இழுத்து வழிபட்டு வருகின்றனர்.