ஒன் பை டூ

இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

“உண்மைநிலையைப் பேசியிருக்கிறார். இந்த நிலத்தின் மூத்த குடிமக்கள் ஆதிவாசிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது காங்கிரஸ்தான். ஆதிவாசிகளின் நலனுக்காகக் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நில உரிமை, வன உரிமைச் சட்டங்களைச் சிதைக்கும் வேலையையே இன்றைய பா.ஜ.க அரசு செய்துகொண்டிருக்கிறது. அவர்களின் நிலங்களைப் பறித்து, பெருமுதலாளிகளுக்குக் கொடுக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியைவைத்து பா.ஜ.க அடையாள அரசியல் செய்தது நமக்கே தெரியும். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பா.ஜ.க-வும் ஆதிவாசிகளை `வனவாசிகள்’ என்றுதான் அழைத்துவருகிறார்கள். சனாதன தர்மத்தின்படி, அவர்கள் நவீனமாவதையும், வேலைவாய்ப்பைப் பெறுவதையும் பா.ஜ.க விரும்பவில்லை. அதேசமயத்தில், மலைவாழ் கிராமங்களில் ஏகலைவன் பள்ளிகளைத் தொடங்கி ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களைப் பரப்பிவருகிறார்கள். ஆதிவாசிகளுக்கென்று தனிப் பண்பாடு இருக்கிறது. ஆனால், வாக்கு அரசியலுக்காக அவர்களைத் தங்களது இந்துத்துவ நீரோட்டத்தில் கலக்கும் வேலையைச் செய்கிறது பா.ஜ.க. 2008-ல் ஒடிசாவில் பழங்குடி மக்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, காங்கிரஸ் அரசுக்கு எதிராகவே பெரும் போராட்டத்தை நடத்தியவர் ராகுல் காந்தி. அன்று முதல் இன்றுவரை ஆதிவாசிகளின் நலனுக்காக உண்மையாகப் போராடுவது காங்கிரஸ் மட்டுமே.’’

சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவுத் தலைவர், தமிழக பா.ஜ.க

“அடிப்படைப் புரிதல் இல்லாமல் பேசியிருக்கிறார். கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மாவோயிஸ்ட்டுகளைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் ‘கிரீன் ஹன்ட்’ என்ற ஆபரேஷனை முன்னெடுத்தார்கள். ஆனால், இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டதெல்லாம் பூர்வகுடி பழங்குடி இனமக்கள் மட்டுமே. தனியாருக்கு மலையைத் தாரை வார்க்க வேண்டும் என்று ஒற்றை நோக்கத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை அகதிகளாக்கியது காங்கிரஸ் அரசு. பழங்குடியினர் நலன் குறித்துப் பேச, காங்கிரஸ்காரர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. அதே சமயத்தில், நாங்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆகியிருக்கிறோம். இதன் மூலமாக அந்த ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கும் ஒரு பெரும் அங்கீகாரத்தை பா.ஜ.க அரசு வழங்கியிருக்கிறது. இப்படி ஒரு நிகழ்வை உலகின் வேறு எந்த நாட்டிலும் காண முடியாது. முன்பு கிட்டத்தட்ட 95 சதவிகிதப் பழங்குடி மக்களுக்குச் சாதிச் சான்றிதழ்கூட வழங்கப்படாமல் இருந்தது. நடைபெற்றுவரும் பா.ஜ.க ஆட்சியில்தான் அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடங்கி, வேலைவாய்ப்பு வரை அனைத்தையும் உறுதிசெய்தது பா.ஜ.க அரசுதான். நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் ராகுல் காந்தி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.