குஜராத்தில் 5 ரூபாய்க்கு உணவு.. 'அன்னபூர்ணா கேன்டீன்'… பாஜக தேர்தல் வாக்குறுதி

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை கட்சிகள் பரபரப்பாக அறிவித்து வருகின்றன.

இதன்படி பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தினசரி 3 வேலையும் 5 ரூபாய்க்கு உணவு விநியோகம் செய்யும் வகையில் குஜராத் முழுவதும் 100 மையங்களில் ‘அன்னபூர்ணா கேண்டீன்கள்’ உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல பாஜக அறிவித்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன;

பெண்களுக்கு இலவசக் கல்வி.

20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராகக் கொண்டு செல்வது.

இரண்டு கடல் உணவுப் பூங்காக்கள்.

20,000 அரசுப் பள்ளிகளை ‘சிறப்புப் பள்ளிகளாக’ மாற்றுவது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆண்டு காப்பீட்டை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக இரட்டிப்பு செய்வது.

மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.

‘வன்பந்து கல்யாண் யோஜனா 2.0’ திட்டத்தின் கீழ், பழங்குடியினர் நலனுக்காக தலா எட்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பேட்டைகளுடன் அனைத்து வகையான சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்குவது ஆகியவை பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.