போர்பந்தர்: குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையை இரு வீரர்களை சக வீரரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணியில் இருந்த 2 சக ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
குஜராத்தின் போர்பந்தர் அருகே உள்ள நவி பந்தர் கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த இரண்டு ஜவான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
பணியில் சுறுசுறுப்பாக இல்லாததால் எழுந்த மோதலில் ராணுவ வீரர் சக வீரர்களை ஏகே-56 துப்பாக்கியால் சுட்டுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த இந்திய ரிசர்வ் பட்டாலியனின் ஒரு பகுதியினரும், மத்திய ஆயுதக் காவல் படையின் (சிஏபிஎஃப்) ஒரு பகுதியினரும் அந்தப் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து மோதலுக்கான விரிவான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, போர்பந்தர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேநேரம், காயமடைந்த இரண்டு ராணுவ வீரர்கள், மேல் சிகிச்சைக்காக 150 கிமீ தொலைவில் உள்ள ஜாம்நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.