குட்கா விற்பனை: `என்கிட்ட வாங்கி தின்னுட்டு, என் மேலேயே கேஸா?'- போலீஸுடன் வாக்குவாதம் செய்த முதியவர்

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பான் மசாலா விற்பனையை கட்டுப்படுத்தும்பொருட்டு காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில் போலீஸார் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதன்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் அருப்புக்கோட்டை, பாலவநத்தம் பகுதிகளிலுள்ள பெட்டிக்கடைகளில் பான் மசாலா விற்கப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலவநத்தம் ஊரின் பஜார் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்த ஆனந்தகுமார் என்பவர், கடைக்கு வெளியே சாக்குப்பையில் மறைத்து வைத்து பான் மசாலா மற்றும் குட்கா போதை வஸ்துகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்த போலீஸார், விற்பனைக்காக கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான் குட்கா மசாலா பொருள்களையும், புகையிலை விற்றப்பணம் 33,900 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

எதிர்ப்பு

இந்த நிலையில் ஆனந்தகுமார் கைதுசெய்யப்பட்ட தகவலை அறிந்த அவர் தந்தை ஆத்தியப்பன், தன் மகன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையின் குறுக்காக காலியான பழக்கூடைப் பெட்டிகளை அடுக்கி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறார். இது பற்றிய தகவல் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸூக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ஆத்தியப்பனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆத்தியப்பன் சமாதானமாக மறுத்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. வீடியோவில் பேசும் ஆத்தியப்பன், “என்கிட்ட வாங்கி தின்ன எல்லாரையும் இங்க வர சொல்லு… நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன்.. என்கிட்டயே வாங்கி தின்னுட்டு, என் மேலேயே கேஸ் போடுவீங்களா?” என கொதித்துப் பேசுகிறார். இதற்கு சார்பு ஆய்வாளர், “நான் உன் கடையில வாழைப்பழம்கூட சாப்பிட்டதில்லையேயா?” என கேட்க, “எனக்கு தெரியும் நீ இல்லைனு, வாங்கித் தின்னவங்களை வரச்சொல்லுங்க… நான் கேக்குறேன்” என ஆத்தியப்பன் கோபத்தை கொப்பளிக்க மறுபடியும் அந்த களம் சூடாகுகிறது.

போலீஸூடன் வாக்குவாதம்

இதற்கிடையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆத்தியப்பன் அடுக்கி வைத்திருந்த பெட்டிகளை போலீஸார் காலால் அப்புறப்படுத்தியதும், கோபத்தின் உச்சிக்கே சென்ற அத்தியப்பன் கைகளில் அரிவாளை வைத்துக்கொண்டு ஆத்திரத்தோடு மீண்டும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயம் சுதாரித்துக் கொண்ட போலீஸார் ஆத்தியப்பனிடமிருந்து லாவகமாக அரிவாளைப் பிடுங்கி பத்திரப்படுத்தினர். ஆனாலும், அடங்க மறுத்த ஆத்தியப்பன், தனி ஆளாக நின்றுக்கொண்டு அங்கிருந்த போலீஸூக்கு பயப்படாமல் பதிலுக்கு பதில் வசைபாடி தீர்த்தது தள்ளுகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒருகட்டத்தில், போலீஸூக்கும், ஆத்தியப்பனுக்கும் இடையே ‘பீப்’ வார்த்தைகளில் மோதல் முற்றவும், புலம்பியவாறே கீழேக்கிடந்த பழப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஆத்தியப்பன் போலீஸாரை கடந்து செல்ல முயன்றார். அதையடுத்து, போலீஸார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.