சிலை கடத்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை அடையாறில் வீட்டின் கார் ஷெட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 24 கற்சிலைகள்,10 கல் பீடங்கள், 5 பாவை விளக்குகள் மற்றும் ஒரு மரப்பெட்டி என 40 பொருட்களை கைபற்றப்பற்றப்பட்டன. அந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா, சௌந்தரபாண்டியன், கந்தசாமி உள்ளிட்ட 35 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இதுதொடர்பாக 1998ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை, சாட்சியங்கள் முறையாக இல்லை, சிலைகள் பழங்கால பொருட்கள் என நிரூபிக்கவில்லை போன்ற காரணங்களை கூறி, அனைவரையும் விடுதலை செய்து 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தி மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், சாட்சியங்களை முறையாக விசாரிக்கவில்லை என்றும், கோவில் நிர்வாகத்தால் உடனடியாக புகார் அளிக்கப்படவில்லை என்பதற்காக திருடியவர்களை தப்பிக்க விடக் கூடாது என்றும், வழக்கு தொடர்புடைய 40 பொருட்களில் 31 அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டு, அவை பழமையான சிலைகள் மற்றும் பொருட்கள் என இந்திய தொல்லியல் துறை ஆய்விற்கு பின் உறுதிசெய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளாமல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த தகவல் மூலமாக 91 சிலைகள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் மேம்போக்காக விசாரித்து அனைவரையும் விடுதலை செய்துள்ளதாக வாதிட்டார்.

இந்திய தொல்லியல் துறை அளித்த சான்றிதழையே நிராகரித்துவிட்டு தவறான நோக்கில் விடுதலை செய்துள்ளதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து சிலை கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நிருபிக்க தவறிய காரணத்தினால் தான் தாங்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிலை கடத்த தடுப்பு பிரிவு மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.

இதன் பின்னர் நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், இந்திய தொல்லியல் துறை அளித்த சான்றுகளை எழும்பூர் நீதிமன்றம் முறையாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். 1994ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீண்ட கால விசாரணை, நீதிமன்றங்களில் நீண்ட கால விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் எழும்பூர் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார். மீட்கபட்ட சிலைகள் அனைத்தும் கோவில்களிலிருந்துதான் மீட்கபட்டது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கத் தவறியதன் அதனடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

கற்சிலைகள் புராதன பொருட்கள் திருட்டு குறித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை சிறப்பாக நடத்தப்பட்டபோதும் வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டதன் காரணமாக குற்றம் சந்தேகத்தின் பலனை சாதகமாக கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, மீட்கப்பட்டவை அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து தான் திருடப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற காரணத்திற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் மீட்கப்பட்ட பொருட்களுக்கு அவர்கள் உரிமை கோர முடியாது என தெளிவுபடுத்தி உள்ளார்.

மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களை சம்பந்தப்பட்ட கோவில் அல்லது அரசு அருங்காட்சியகங்களின் பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றிற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரிமை கோர முயற்சித்தால், இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.