திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. பின்னர், பிடாரி அம்மன் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது.
இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் தங்கக்கொடி மரம் அருகே உள்ள பிடாரி அம்மன்சந்நிதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பிடாரி அம்மன், மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் திரண்டு, கற்பூர தீபாராதனை காண்பித்து தரிசனம் செய்தனர். இதையடுத்து, விநாயகர் உற்சவம் இன்றிரவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நாளை(நவ. 27-ம் தேதி) காலை நடைபெறவுள்ளது. கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில், சதுர்த்தி திதி, பூராடம் நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபதினம், விருச்சிக லக்னத்தில் காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள், மங்கல இசை ஒலிக்க,வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெறவுள்ளது.