ஹைதராபாத்: தெலங்கானா மாநில வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாரெட்டியின் ஹைதராபாத் வீட்டில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து 48 மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
மேலும், சோதனையின் போது கொண்டு சென்ற லேப்டாப் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் அமைச்சர் மல்லாரெட்டி மீது ஐடி துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன லேப் டாப்பை அமைச்சரின் வீட்டில் இருந்து கொண்டு வந்து அதிகாரிகளிடம் வழங்கினர்.
ஆனால், அதில் இருந்த பல முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டதால், லேப்டாப்பை ஐடி துறை அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டனர். தற்போது அந்த லேப்டாப் போலீஸ் நிலையத்திலேயே உள்ளது.
இந்நிலையில், வருமான வரித் துறை சோதனை போலி, இதற்கு காரணமான ஐடி துறை இணை இயக்குனர் ரத்னாகரை கைது செய்ய கோரி அமைச்சர் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போயனபல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து பிடிவாரன்ட் பிறப்பித்தனர்.
இதையடுத்து தெலங்கானா உயர்நீதி மன்றத்தில் நேற்று அதிகாரி ரத்னாகர் அவசர மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், 4 வாரங்களுக்கு ரத்னாகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.