தேசிய கொள்கைத் தயாரிப்பு தொடர்பில் துணைவேந்தர்கள் ஊடாக பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் எதிர்காலத் திட்டம் குறித்த ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்த இக்கூட்டத்தில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை நடத்த இணக்கம் காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னோடியாக, கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டிய முக்கிய துறைகள் குறித்து பேராசிரியர் கிருஷான் தெஹரகொட குழுவுக்கு விளக்கமளித்தார். இதில் கலந்துகொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இந்த நாட்டில் எவ்வாறு கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்கமைய முன்னுரிமை அடிப்படையில் அந்தந்தத் துறைக்கான பல்கலைக்கழ விரிவுரையாளர்களை இணைத்துக்கொண்டு, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவினால் எதிர்கால நடவடிக்கைகளை முன்பெடுப்பதற்கும் இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, இலங்கையில் கொள்கைத் தயாரிப்புக்கென தனியான நிறுவனமொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கமைய பாராளுமன்றத்தின் ஊடாக உரிய சட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய சபைக்கு முன்மொழியவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் கௌரவ சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ பவித்ரா வன்னியாராச்சி, கௌரவ வஜித அபபேவர்தன மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.