டேராடூன்: பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ கட்சிக்குள் ஊடுருவியுள்ளன. அவர்கள் எல்லா வகையிலும் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கரண் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் கரண் மகாரா பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்குள் பலரை பாஜக நுழைத்துள்ளது. அவர்கள் பாஜக ஆதரவாளர்கள். காங்கிரஸை வலுப்படுத்த யார் முயன்றாலும் அவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள் அல்லது வலுப்படுத்த முயற்சிப்பவர் மீது களங்கம் சுமத்துவார்கள்.
மத்திய அமைச்சர் அமித் ஷா நடத்திய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ‘காங்கிரஸை வலுவிழக்கச் செய்ய அக்கட்சியில் நன்றாக செயல்படுவோரை களங்கப்படுத்த வேண்டும்’ என கூறியுள்ளார். அதைத்தான் காங்கிரஸுக்குள் ஊடுருவியவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் பகலில் காங்கிரஸ் அலுவலகத்திலும் இரவில் பாஜக தலைவர்கள் உடனும் இருக்கின்றனர். இத்தகைய சக்திகளிடம் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கரண் மகாரா கூறினார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக சிலர் பேசி வரும் நிலையில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் கரண் மகாரா இவ்வாறு கூறியுள்ளார்.