மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்-தஞ்சாவூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

தஞ்சாவூர் : மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில் வாசக்டமி இரு வார விழா கடந்த 21ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த இரு வார விழாவின் முன்னிட்டு தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் துவங்கப்பட்டுள்ளது.

இரு வார விழாவின் நோக்கமானது முதல் வாரத்தில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, மருத்துவக் கல்லூரி மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார அளவிலான அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசுரம் வழங்க அனைத்து நிலையங்களில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் முகாம் ஏற்பாடு செய்து அதிக எண்ணிக்கையில் தகுதியுள்ள தம்பதியர்களில் ஆண்கள் பங்கேற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் என்எஸ்வி சிறப்பு முகாம் தொடக்கமாக நாளை தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையிலும், 30ம் தேதி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், டிச. 21ம் தேதி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பவருக்கு ரூ.1100 ம் ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்களும், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.200 தமிழ்நாடு அரசால் வழங்கபடுகிறது.

இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யப்படுகின்றன
இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் மருமலர், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கத்தியின்றி, தையலி்ன்றி

மேலும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், எளிய பாதுகாப்பான வாசக்டமி, மூன்றே நிமிடங்களில் கத்தியின்றி, தையல் இன்றி செய்யப்படுகிறது. ஆனந்த வாழ்க்கை பெறுவதில் தடையில்லை, பக்க விளைவுகள் எதுவும் இல்லை, கடின உழைப்பினை மேற்கொள்ளலாம், மயக்க மருந்து அளிப்பதில்லை, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை, அளவான குடும்பத்தை அமைப்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பாகும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.