ஷங்கர் இல்லாமல் 'ஆர்சி 15' பாடல் படப்பிடிப்பு

தமிழ்த் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழில் 'இந்தியன் 2', தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத ராம் சரணின் 15வது படத்தை இயக்கி வருகிறார். இந்தத் தெலுங்குப் படத்தை 'ஆர்சி 15' என தற்காலிகமாக அழைத்து வருகிறார்கள்.

'இந்தியன் 2' படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்குகளில் நடைபெற்று வருகிறது. அதில் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். 'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கரின் முன்னாள் உதவியாளர்களாக இருந்து சில பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர்கள் தற்போது உதவி இயக்குனர்களாகப் பணிபுரிந்து உதவி செய்து வருகிறார்கள். அதனால்தான் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஷங்கர் எளிதில் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ராம் சரணின் 'ஆர்சி 15' படத்தின் பாடல் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடையில் உணவருந்தும் புகைப்படங்களை படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி பதிவிட்டிருந்தார். அதில் இயக்குனர் ஷங்கர் இல்லை. அதனால் ரசிகர்கள் இயக்குனர் ஷங்கர் எங்கே என கமெண்ட் செய்து வருகிறார்கள். சில சமயங்களில் வெளிநாடுகளில் நடக்கும் பாடல் காட்சிகளுக்கு படத்தின் இயக்குனர்கள் செல்ல மாட்டார்கள். நடன இயக்குனர் மட்டுமே பாடலைப் படமாக்கிவிட்டு வருவார். ஆர்சி 15 படத்திற்கும் நியூசிலாந்து பாடல் காட்சி ஷங்கர் இல்லாமல் படமாகி வருவதாகத் தகவல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.