அதிமுகவை ஓபிஎஸ் – ஈபிஎஸ் பலவீனப்படுத்திவிட்டார்கள் – டிடிவி டமால்

சென்னை, ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் 2024 பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்குமா அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தினகரன், ஒரு நாட்டை பொறுத்தவரை இரு பலமான கட்சிகள் இருக்க வேண்டும். யாருக்கு சாதகமான சூழல் இருக்கிறது என்பது தேர்தல் வருவதற்கு சில மாதங்கள் முன்பு தெரிந்து விடும். ஆகையால், அடுத்த நவம்பரில் அதை கணிக்க முடியும். தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்று அவர் பதிலளித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே கூட்டணிதான் அடுத்த தேர்தலிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வரும் தேர்தலில் அந்த கூட்டணியை எதிர்த்து அதிமுக பலமான கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், மக்களுக்கு திமுக கூட்டணி மீது 2021 இல் இருந்த ஆதரவு தற்போது இல்லை. முடியாததை எல்லாம் செய்வோம் என்று திமுக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டது.

இந்த ஓன்றரை ஆண்டு திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அது போக போக அதிகரிக்கும். எதையோ சொல்லி ஆட்சிக்கு வந்து இப்போது சமாளிக்க முடியாமல் திராவிட மாடல் என்று ஸ்டாலின் புலம்பிக்கொண்டிருக்கிறார் என தினகரன் பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய தினகரன், திமுகவை ஒழிக்க நினைக்கும் காட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். அதிமுகவை ஓபிஎஸ் – ஈபிஎஸ் சேர்ந்து பலவீனப்படுத்திவிட்டார்கள். அம்மாவின் பெயரும், இரட்டை இல்லை சின்னமும் தான் அவர்களை காப்பாற்றி கொண்டிருக்கிறது. அதுவும் வழக்கு விசாரணையில் இருப்பதால் யார் பக்கம் தீர்ப்பு வரும் என்று தெரியாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே என் எண்ணம் என டிடிவி தினகரன் கூறினார்.

மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதை குறித்து கேட்டதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பால் பெரும்பாலான மின் நுகர்வோர்கள் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.