திருநெல்வேலி: ‘இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ என்று பாளையங்கோட்டையில் பொருநை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் பொருநை (தாமிரபரணி), வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து மண்டலங்களில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைத்து முதல் விழாவாக ‘பொருநை இலக்கியத் திருவிழா’ பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது.
இவ்விழாவை பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேரளஎழுத்தாளர் கல்பட்டா நாராயணன், எழுத்தாளர் வண்ணதாசன், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ் சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரியது. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என பல அகழாய்வுகள் வழியாக அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ள நமது தொன்மை, நமது பெருமை. இந்தபெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று, அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் 5 இடங்களில் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. இதன் முதல் நிகழ்வாக அன்னை மடியான பொருநை ஆற்றங்கரையில் நடைபெறும் இலக்கியத் திருவிழா சிறந்ததொரு முயற்சி. ‘இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
கேரள எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் பேசும்போது, “தாய்மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு நதியின் கரையில் இலக்கியத் திருவிழாவை நடத்துவது அற்புதமானது. அகில இந்திய அளவில்சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதுபோல் தமிழ்நாடு சாகித்யஅகாடமி விருது உருவாக்கப்பட வேண்டும். இது காலத்தின் தேவை”என்றார்.
எழுத்தாளர் வண்ணதாசன் பேசும்போது, “தமிழகத்தில் இந்தஅரசு பொறுப்பேற்றபின் முதல் முதலாக கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கோவில்பட்டியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ் அறிஞர்களுக்கு கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. படைப்பாளிகள் சார்பில் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறும்போது, “இதுபோன்ற இலக்கிய விழாவை யாரும் நடத்தியதில்லை. இதற்காக பள்ளிக் கல்வித்துறையைப் பாராட்டுகிறேன். மொழியைக் காக்க மொழிப்போரும் எங்களால் நடத்த முடியும். மொழியை பெருமைப்படுத்த இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளும் நடத்த முடியும்” என்று தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “தமிழக மக்கள் தொகையில் 6-ல்ஒருவர் அரசுப் பள்ளி மாணவராகஇருப்பது எங்களது துறைக்கு பெருமை. அரசுப் பள்ளியில் பயில்வது பெருமைக்குரியது என்றநிலையை உருவாக்கி வருகிறோம். இலக்கியவாதிகள், படைப்பாளிகள், தமிழ்மொழி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும்ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது” என்று தெரிவித்தார்.
விழாவுக்கு ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார். பொது நூலக இயக்கக இயக்குநர் க.இளம்பகவத், மு.அப்துல் வகாப் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா. செல்லத்துரை பங்கேற்றனர். இத்திருவிழா இன்று நிறைவடைகிறது.
பாளையங்கோட்டையில் 5 அரங்கங்களில் இவ்விழா நடைபெறுகிறது. இலக்கிய உரை, கவியரங்கம், 4 மாவட்டங்களின் மாணவர்களுக்கான போட்டிகள், தமிழ்கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் புகைப்படம், ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.