இளைஞர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யை வைத்து ‘தளபதி 67’ படத்தை இயக்கப்போவது குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிக்கொண்டே வருகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ்-விஜய் காம்போவில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்லதொரு வெற்றியை பெற்று அடித்திருந்தது, இதன் காரணமாக மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகப்போகும் ‘தளபதி 67’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, கடந்த 2005ம் ஆண்டு டேவிட் க்ரோனன்பெர்க் என்பவரது இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் கேங்க்ஸ்டர் படமான ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் தளபதி 67 படம் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் டேவிட் க்ரோனேன்பெர்க் இயக்கத்தில் 2005ம் ஆண்டில் வெளியான ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஹாலிவுட் படமாகும், இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை ஜோஷ் ஆல்சன் எழுதியிருக்கிறார். இந்த படம் 1997ம் ஆண்டு ஜான் வாக்னர் மற்றும் வின்ஸ் லாக் ஆகிய இருவரால் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும், இந்த நாவலின் பெயரும் ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ என்பது தான், இப்படத்தில் விக்கோ மோர்டென்சன், மரியா பெல்லோ, வில்லியம் ஹர்ட் மற்றும் எட் ஹாரிஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் வெளியாகியுள்ள தகவல்களின்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகவும், அப்படத்தில் விஜய் நடிக்கப்போவதால் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் படத்தின் திரைக்கதையை சற்று மாற்றியமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 67 படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் உள்ள சில கதாபாத்திரங்கள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது, இருப்பினும் இதுகுறித்த தெளிவான மற்றும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துவருகிறார், இப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.