கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவண்ணாமலை தீபத்திருவிழா; பக்தர்கள் வந்து செல்ல சிறப்பான ஏற்பாடுகள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில், விடியற்காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் சிவாசார்யர்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளி அருள்பாலித்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என மனமுருகி வேண்டிக்கொண்டனர். தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலித்தனர். இன்று இரவு சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகிறார்கள். நாளைக் காலை தங்க சூரிய பிரபை வாகனத்திலும், நாளை இரவு வெள்ளி இந்திர வாகனத்திலும் பவனி நடக்கிறது. இப்படியே, அடுத்த 10 நாள்களுக்கும் தீபப் பெருவிழா களைகட்டவிருக்கிறது.

தீபத்திருவிழா கொடியேற்றம்

முக்கிய நிகழ்வுகள்:

டிசம்பர் 3-ம் தேதி மகா ரதம், 6-ம் தேதி காலை கருவறையில் பரணி தீபம், அன்று மாலை 2,688 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது. 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரையிலும் தெப்பல் திருவிழா நடைபெறும். 7-ம் தேதி காலை 8.14 மணி முதல் மறுநாள் காலை 9.22 வரை பௌர்ணமி கிரிவலம் செல்லலாம்.

ஏற்பாடுகள்:

1,160 பேருந்துகளை நிறுத்தக்கூடிய அளவுக்கு 13 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன. அதேபோல 12,400 கார்கள் நிறுத்தும் அளவுக்கு 59 கார் நிறுத்துமிடங்களும் அமைக்கப்படவிருக்கின்றன. அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் குடிநீர் வசதி, கழிவறைகள், விளக்குகள், மேற்கூரைகள், காவல் உதவி மையங்களும் அமைக்கப்படவிருக்கின்றன.

போக்குவரத்து வசதிகள்:

2,692 சிறப்புப் பேருந்துகள் 6,431 நடைகள் இயக்கப்பட உள்ளன. தற்காலிகப் பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப் பாதை இடையே 100 ஷட்டில் சர்வீசஸ் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தற்போது 9 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக மேலும் 14 சிறப்பு ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ கட்டணம் 2.5 கிலோ மீட்டருக்கு 30 ரூபாயும், அதற்குமேல் 50 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ வசதிகள்:

திருக்கோயில் வளாகத்திற்குள் இதய மருத்துவருடன் 3 மருத்துவக் குழுக்கள் தயாராக இருப்பார்கள். கிரிவலப் பாதையில் 15 நிலையான மருத்துவக் குழுக்கள் முகாமிட்டிருப்பார்கள். 15 எண்ணிக்கையில் ‘108’ ஆம்புலன்ஸுகளும், 10 பைக் ஆம்புலன்ஸ், 5 ஜம்ப் கிட் போன்றவையும் தயார் நிலையில் இருக்கும்.

அண்ணாமலையார்-உண்ணாமுலையம்மன்

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

பாதுகாப்புப் பணியில் 12,097 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 26 தீயணைப்பு வாகனங்கள், 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். திருக்கோயில் வளாகத்திற்குள் 169 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் 97 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. 57 இடங்களில் காவல் கண்காணிப்புக் கோபுரங்கள், அதாவது வாட்ச் டவர் அமைக்கப்பட்டுவருகிறது. 35 இடங்களில் ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற பெயரில் பூத்கள் அமைக்கப்படும். 4 கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களின் மணிக்கட்டுகளில் பட்டை கட்டப்படும்.

அடிப்படை வசதிகள்:

தன்னார்வலர்களாக 1,000 கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். 158 இடங்களில் குடிநீர் வசதி செய்துதரப்படுகிறது. 85 இடங்களில் 423 டாய்லெட் மற்றும் 386 சிறுநீர் கழிப்பிட வசதிகளும் அமைகின்றன. 2,925 தூய்மைப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 460 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. 33 ஹைமாஸ் லைட் மற்றும் 1,218 தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டுவருகின்றன. மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். தீபத்திருவிழா நிகழ்வுகள் பெரியத்திரை வாயிலாகவும் 12 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கிரிவலப் பாதை மற்றும் இணைப்பு சாலைகளில் வழிக்காட்டுதல் பலகைககள் வைக்கப்படும். 101 இடங்களில் இணைய வழியில் அன்னதானம் செய்ய அனுமதி செய்யப்படும். உணவுப் பாதுகாப்பு துறையினரால் 14 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

தீபத்திருவிழா கொடியேற்றம்

கிரிவலத்தின்போது, துணிப்பை எடுத்து வருபவர்களுக்குக் குலுக்கல் முறையில் 4 தங்க நாணயங்கள் (2 கிராம்) மற்றும் 72 வெள்ளி நாணயங்கள் (4 கிராம்) அளிக்கப்படும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகத் துணிப்பை அளிக்க 9 சிறப்பு மையங்கள் திறக்கப்படும். 2-ம் தேதி முதல் 6-ம் வரை 5 நாள்கள் மாட்டுச் சந்தையும் நடைபெறுகிறது. வாகனம் நிறுத்துமிடங்கள், கால்நடைச் சந்தை, ஷட்டில் பஸ் சர்வீசஸ் ஆகியவற்றிற்குக் கட்டணம் ஏதுமில்லை. அதேபோல, 34 இடங்களில் ஆவின் பாலகங்களும் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கொரோனா பொதுமுடக்கத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக தீபத்திருவிழா சாதாரண முறையில் நடைபெற்றது. இதனால், இந்த முறை விமர்சையாக நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த முறை பக்தர்களும் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பாதுகாப்பும் பலத்தப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.