செல்போன் எண்கள் விற்பனை: வாட்ஸ் அப் பயனர்களுக்கு அதிர்ச்சி!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை நடத்தி வரும் மெட்டா நிறுவனம்தான் வாட்ஸ்அப் செயலியையும் நடத்தி வருகிறது.

வாட்ஸ் அப் செயலியில் அடிக்கடி ஹேக்கர்கள் ஊடுருவுவது, தனியுரிமை மீறுதல் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி வருவதால், பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இதனால், அடிக்கடி அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கும் நிலையில், உலகில் மிகப்பெரிய ஹேக்கர்களின் தகவல் திருட்டில் சுமார் 50 கோடி வாட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதுமுள்ள 84 நாடுகளை சேர்ந்த வாட்ஸ் அப் பயனாளர்களின் தகவல்கள் விற்பனை செய்யப்படுவதாக சைபர்நியூஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. 487 மில்லியன் வாட்ஸ் அப் பயனர்களின் சமீபத்திய தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக நன்கு அறியப்பட்ட ஹேக்கர்கள் அண்மையில் தெரிவித்தனர். இதையடுத்து, தரவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, வாட்ஸ் அப் பயனர்களின் தகவல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையானதாக இருக்கலாம் என கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கொரோனா ஊரடங்கால் கொல்லப்பட்ட மக்கள்; தேசியகீதம் பாடி போராட்டம்.!

அதாவது உலகெங்கிலும் உள்ள 2 பில்லியன் வாட்ஸ் அப் பயனாளர்களில் 25 சதவீதம் பேர் ஆபத்தில் இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த தகவல்கள் மோசடி நடைமுறைகள், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தரவுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, ரஷ்யா, இத்தாலி, சவுதி அரேபியா, இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள், சமீபத்திய தகவல்கள் உள்ளதாகவும் சைபர்நியூஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள 32 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ் அப் பயனர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்து (11 மில்லியன்). எகிப்து (45 மில்லியன்), இத்தாலி (35 மில்லியன்), சவுதி அரேபியா (29 மில்லியன்), பிரான்ஸ் (20 மில்லியன்), துருக்கி (20 மில்லியன்), ரஷ்யா (10 மில்லியன்) பயனர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் இருந்து, 6 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களின் தகவல் கசிந்திருக்க கூடும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தரவு மீறல் உரிமைகோரல்களைச் சரிபார்க்க சுமார் 2,000 எண்களின் மாதிரியைப் பெற்றதாகவும், அவை வாட்ஸ்அப் பயனர்களுக்கு சொந்தமானது என்றும் சைபர்நியூஸ் அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் இந்த தகவல்கள் ரூ.5,71,690 லட்சத்துக்கும், இங்கிலாந்து, ஜெர்மனி முறையே ரூ.2,04,175, ரூ.1,63,340 லட்சத்துக்கும் விற்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மெட்டா நிறுவனமும் அதன் இயங்குதளங்களும் தரவு மீறலுக்கான குற்றச்சாட்டுக்கு ஆளாவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, 500 மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ஆன்லைனில் வெளியானது. கசிந்த அந்த தரவுகளில் தொலைபேசி எண்கள் மற்றும் பிற விவரங்களும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.