திகார் சிறையில் உள்ள ‘சொகுசு’ அமைச்சருக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள்: புது வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம்ஆத்மி அமைச்சருக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சிறையில் சொகுசாக இருக்கும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று புதிய வீடியோ ஒன்றை பாஜக தலைவர் ஹரிஷ் குரானா பகிர்ந்துள்ளார். அதில், ‘அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் 10 ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திகார் சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘சத்யேந்தர் ஜெயின் இருக்கும் சிறை அறையில் அவருக்கு உதவி செய்வதற்காக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அறையைச் சுத்தம் செய்தல், படுக்கையை சரி செய்தல், அறைக்குள் வெளி உணவை வாங்கி வந்து கொடுத்தல், மினரல் வாட்டர், பழங்கள், உடைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட தனிப்பட்ட தேவைகளை எட்டு பேர் கவனித்துக் கொள்கின்றனர்.

மேலும் இருவர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 10 பேரைத் தவிர, பாலியல் பலாத்கார குற்றவாளியான ரிங்கு, அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ளார்’ என்றனர். மேற்கண்ட 10 பேரும் சிறையில் உள்ள கைதிகளா அல்லது வெளியாட்கள் யாரேனும் நியமிக்கப்பட்டனாரா? என்பது விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.