புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் (57) சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த மே 30-ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டது, ஒருவர் மசாஜ் செய்வது, ஓட்டல்களில் இருந்து உணவு வகைகள் வழங்கப்படுவது என தனித்தனி வீடியோக்கள் வெளியாகி வைரலானது. அமலாக்கத் துறையும் புகார் தெரிவித்ததால், சிறை கண்காணிப்பாளர் (7) அஜித் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 12 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 12-ம் தேதி இரவு 8 மணிக்கு பதிவான மேலும் ஒரு வீடியோ நேற்று வெளியானது. அந்த வீடியோவில், சிறை அறையில் உள்ள ஜெயினுடன் சாதாரண உடையணிந்த 3 பேர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பாளர் அஜித் குமார் அங்கு வருகிறார். இதையடுத்து அங்கிருந்த 3 பேரும் வெளியேறுகின்றனர். பின்னர் குமாரும் ஜெயினும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஆம் ஆத்மி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.