திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூரை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரின் திருமணத்திற்கு நிச்சயம் செய்வதற்காக வேனில் பத்துக்கும் மேற்பட்டோர் கீழ்பென்னாத்தூர் வழியாக செஞ்சிக்கு சென்றனர். இந்த வேனை நாராயணசாமி என்பவர் ஓட்டிச் சென்றார்.
இதையடுத்து இந்த வேன் கருங்காலி குப்பம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென எதிரில் வந்த டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில், வேன் ஓட்டுனர், டிராக்டர் ஓட்டுனர் மற்றும் வேனில் பயண செய்த சில பெண்கள் உள்பட மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர்.
அந்த பகுதியில் இருந்த சிலர் இதைப் பார்த்த உடனே ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தின் துணை தலைமை காவலர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.