பாரமுல்லா: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிரவாதத்தை கைவிடுபவர்களின் மறுவாழ்வுக்கு திட்டங்கள், தீவிரவாத பின்னணி உள்ளவர்களுக்கு அரசு வேலை மறுப்பு போன்ற பல திட்டங்களுக்கு பலன் கிடைத்து வருகிறது.
அதன்படி, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 10 மாவட்டங்களில் குப்வாரா, கந்தர்பால், பந்திபோரா, பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து ஒரு இளைஞர் கூட தீவிரவாத இயக்கங்களில் இந்த ஆண்டு இதுவரை சேரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் குடிபெயர்ந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், இதுவரை 5 லட்சம் புதிய வாக்காளர்கள் ஜம்மு காஷ்மீரில் பெயர் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காஷ்மீர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது உள்ளூர் மக்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டுள்ளனர். இளைஞர்கள் தற்போது கல்வி, விளையாட்டு, வேலை போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்’’ என்றார்.