சென்னை: பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் இஓஎஸ்-06 உள்ளிட்ட 9 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவைப்படும் தொலையுணர்வு வகை செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
அதன்படி, கடல் ஆய்வுப் பணிகளுக்காக 1999, 2009-ல் ஓஷன்சாட்-1, ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் ஆய்வுக்காலம் 2011-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. ஓஷன்சாட்-2 செயற்கைக் கோளில் சில கருவிகள் பழுதானதால், அதிலிருந்து தகவல்களைப் பெற முடியாத நிலை உள்ளது.
எனவே, புவி கண்காணிப்பு, கடலாய்வு செயல்பாடுகளுக்காக, அதிநவீன ஓஷன்சாட்-3 (இஓஎஸ்-06) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி 30 நிமிட நேர கவுன்ட்-டவுண் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சரியாக 17 நிமிடத்தில் இஓஎஸ்-06 செயற்கைக்கோளை 742 கி.மீ. தொலைவில், திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
மேலும், 2 மணி நேரத்துக்குப் பிறகு, இதர 8 சிறிய செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட ராக்கெட் பயணங்களில் இதுவும் ஒன்றாகும்.
முதன்மை செயற்கைக்கோளான இஒஎஸ் 1,117 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், கடலின் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் வேக மாறுபாடு, வளிமண்டலத்தில நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, தரவுகளைப் பெற முடியும்.
இதேபோல, இந்திய-பூடான் கூட்டமைப்பில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ்-2பி, பெங்களூரு பிக்சல் நிறுவனத்தின் ஆனந்த் சாட், ஐதராபாத் துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், அமெரிக்காவின் ஸ்பேஸ் ப்ளைட் நிறுவனத்தின் ஆஸ்ட்ரோகாஸ்ட் செயற்கைக்கோள்கள், அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
ராக்கெட் ஏவுதளம்: இதுகுறித்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மீன்வளம் மற்றும் கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள ஓஷன்சாட்-3 செயற்கைக்கோள் உதவும். சூரியனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அங்கு குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் பாதுகாப்பு சுவர்கள் அமைப்பதற்கான கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.
நேபாளம், இலங்கை உள்ளிட்ட 61 நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன” என்றார்.
பூடான் அமைச்சர் பங்கேற்பு: பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி வாயிலாக பேசும்போது, ‘‘ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்துகள். 2019-ல் பூடான் பயணத்தின்போது, அந்த நாட்டில் இஸ்ரோ உதவியுடன் அமைக்கப்பட்ட செயற்கைக்கோள் மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த மையம் பூடானின் தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகிறது’’ என்றார். இந்த நிகழ்வில், பூடான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கர்மா டன்னேன் வாங்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.