உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியில் இருக்கும் பள்ளியின் வகுப்பு ஒன்றில், பெண் ஆசிரியரிடம் மாணவர்கள் தகாத முறையில் பேசியுள்ளனர். பள்ளியில் அந்த பெண் ஆசிரியர் நடந்து செல்லும் போதெல்லாம், ‘I Love U’ என்று கூச்சலிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அதனை வீடியோகவும் எடுத்து, அவற்றை போலி கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.
அந்த வீடியோவில், அந்த ஆரிசியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, குறிக்கிட்ட அந்த மாணவர்கள் தகாத வகையில் மோசமான கருத்துக்களை கூறுவது அப்பட்டமாக கேட்க முடிகிறது. மொத்தம் 28 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில், மூன்று மாணவர்கள் சேர்ந்து, அவரிடம் ஐ லவ் யூ என்று சொல்வதும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, இதை அந்த வகுப்பில் இருக்கும் மாணவிகளும் கேட்டு சிரிப்பதும் தெரிகிறது.
தங்களின் ஆசிரியர் என்று கூட பார்க்காமல், மோசமான கருத்துகளை கூறும் மாணவர்கள் அவர் பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும் அந்த மாணவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. எனவே, அவர்களுக்கு வகுப்பில் பாடம் எடுத்தால் போதாது, வேறு பாடம் எடுத்தால்தான் அவர்கள் திருந்துவார்கள் என்று அந்த ஆசிரியர் மாணவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து, மாணவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் மூலம் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரோனா காலகட்டத்தில், மாணவர்களின் கைகளில் அதிக செல்போன் புழக்கம் ஏற்பட்டது.
இதனால், வகுப்பறைகளில் செல்போன்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. செல்போன்கள் மூலம் ஆசிரியர்கள், மாணவிகளை வீடியோ எடுப்பது, தவறான கருத்துகள் இட்டு இணையத்தில் பதிவேற்றுவது போன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து காணப்படுகிறது.