“பொண்டாட்டிகிட்ட தோக்குறதுதான் நல்லது!" ~ நடிகர் விஷ்ணு விஷால்

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது `கட்டா குஸ்தி’ திரைப்படம். கோலகலமாக நடைபெற்ற 5-ம் ஆண்டு `அவள் விருதுகள்’ விழாவில், நடிகை பிரியங்கா மோகனுக்கு `யூத் ஸ்டார்’ விருதை நடிகர் விஷ்ணு விஷாலும், இயக்குநர் செல்லா அய்யாவும்  இணைந்து வழங்கினர்.

பிரியங்கா மோகன்  விருது பெற்றுச் சென்ற பிறகு, பேட்மின்ட்டன் வீராங்கனையும், நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா குட்டா மேடையேறினார்.

“தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் படங்களாகவே நிறைய பண்றீங்களே?” என விஷ்ணு விஷாலிடம் தொகுப்பாளர்கள் கேட்க…

“நான் ஒரு கிரிக்கெட்டர்ங்குறதால இயல்பாவே எனக்கு ஸ்போர்ட்ஸ் மேல ஈடுபாடு இருக்கு. என் முதல் படமான `வெண்ணிலா கபடிக் குழு’வே ஸ்போர்ட்ஸ் படம்தான். அப்புறம் கிரிக்கெட்டை வெச்சு `ஜீவா’, இப்ப `கட்டா குஸ்தி’, அடுத்ததா பண்ணப்போற `லால் சலாம்’ படம் கூட ஸ்போர்ட்ஸ் மூவிஸ்தான். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குற அந்தப் படத்துல ரஜினி சார் கெஸ்ட் ரோல் பண்றார். கால்ல அடிபட்டதால பத்து வருஷமா கிரிக்கெட் ஆட முடியாமப் போச்சு. அந்த பத்து வருஷத்தோட உழைப்பைக் கொடுத்து அதுக்கான வெற்றியை சினிமாவுல அடைஞ்சிருக்கேன். விளையாட்டு எப்பவும் பாசிட்டிவிட்டியைக் கொடுக்கும்“ என்றவரிடம், ஜுவாலா குட்டாவுடன் காதல் மலர்ந்த தருணம் குறித்துக் கேட்டதற்கு…

“விவாகரத்துக்கப்புறம், விபத்துல அடிபட்டு பெட் ரெஸ்ட்ல இருந்தேன். உடல் எடையெல்லாம் ரொம்ப கூடிப்போயிருந்தது. அந்த நேரத்துல, ஜுவாலாதான் ஃபைட் பேக் பண்ணி வரணும்னு என்னை ஊக்கப்படுத்தினாங்க. அப்படித்தான் எங்க காதல் வளர்ந்தது. ஜுவாலா என் வாழ்க்கையில வந்தப்புறம் என்னோட கரியர்ல நான் ரொம்ப நல்லா போயிட்டிருக்கேன்” என நெகிழ்ந்தார் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷாலைத் தொடர்ந்து, ஜுவாலா குட்டாவிடம் “பெண் விளையாட்டு வீரர்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ச்சியா பேசிட்டு வர்றீங்களே” எனக் கேட்டதற்கு…

“விளையாட்டுத் துறையில பெண்கள் சந்திக்கிற பிரச்னைகளைப் பத்தி யாரும் பேசுறதில்லை. நான் அந்த மௌனத்தை உடைக்கணும்ங்கிறதுக்காகத்தான் பேசிட்டு வர்றேன்” என்றார்.

அடுத்ததாக இயக்குநர் செல்லா அய்யாவு ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் குறித்துக் கூறினார்.

“சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் தான் என் முதல் படம். ‘கட்டா குஸ்தி’ங்கிறது ஒருவித மல்யுத்தம்தான். முன்னாடி மண்ணுல நடந்துகிட்டிருந்தது. இப்ப மேட்ல நடக்குது. இந்தப் படத்துல ஸ்போர்ட்ஸ் இருக்குன்னாலும் முழுப்படமும் அது கிடையாது. கணவன் – மனைவி உறவை அடிப்படையா வெச்சுதான் இந்தப் படம் பண்ணியிருக்கோம். ஐஸ்வர்யா லட்சுமி இதுல ஹவுஸ் வொய்ஃபா நடிச்சிருக்காங்க. ஆண் – பெண்ணுங்குற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோரும் சமம்னு சொல்ற விதமாகத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம். பெண்கள் சமமா நடத்தப்படணும். என் படங்களைப் பொறுத்தவரைக்கும் பெண்களைத் தவறா சித்தரிக்க மாட்டேன். என் தயாரிப்பு நிறுவனத்துல 5 பெண்கள் வேலை செய்யுறாங்க” என்றார் செல்லா அய்யாவு.

விஷ்ணு விஷாலுக்கும் ஜுவாலா குட்டாவுக்கும் மேடையிலேயே Hand wrestling போட்டி நடத்தப்பட்டது. வெற்றிபெறும் முனைப்போடு ஜுவாலா குட்டா தன் பலத்தைத் திரட்டிப் போராடி விஷ்ணு விஷாலை வீழ்த்தினார்.

“பொண்டாட்டிகிட்ட தோக்குறதுதான் நல்லது” என்று விஷ்ணு விஷால் கூறவே அரங்கில் கைதட்டல்கள் எழுந்தன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.