முதல்வருக்கு பள்ளி மாணவனின் உருக்கமான வேண்டுகோள்: வீடியோ வைரல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூர் அரசு மணல் குவாரிக்கு செல்லும் லாரிகளால் அச்சம் அடைந்திருப்பதாக பள்ளி மாணவன் பேசிய வீடியோ பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓரியூரில் சில நாட்களுக்கு முன் அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. தினமும் ஏராளமான லாரிகள், டிராக்டர்களில் மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து எஸ்.பி.பட்டினம் பள்ளி மாணவன் ஏ.முகமதுரிஸ்வான் அச்சத்துடன் பேசிய வீடியோ பேச்சு வெளியானது. அதில் ஓரியூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். பக்கத்தில் மணல் குவாரி லாரிகள் ஓடுகின்றன. காலை 8:00 முதல் 10:00 மணி வரை பள்ளிக்கு செல்லும் போது லாரிகளால் விபத்து ஏற்படுமோ என அச்சமாக உள்ளது. அந்த நேரத்தில் மட்டும் லாரிகளை ஓட விடாம பாத்துகுங்க.

அதே போல் மாலையில் 4:00 முதல் 5:30 மணி வரை அந்த லாரிகளை நிறுத்தி வைச்சு, சும்மா இருக்கிற டயத்துல ஓட்டுங்க. தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறேன். சின்ன, சின்ன பிள்ளைகள் செல்லும் போது பார்க்கிறேன். இன்றைக்கு கூட பார்த்தேன். லாரிகள் டக், டக்,டக் என்று செல்லும் போது அச்சமாக உள்ளது. ஆகவே பிள்ளைகளை பாதுகாக்க அந்த நேரத்தில் மட்டும் லாரிகளை நிறுத்திவையுங்கள், என்று பேசியுள்ளார்.

எனவே மணல் லாரிகளை பள்ளி நேரத்தில் இயக்குவதை நிறுத்த வேண்டும் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் கோரிக்கை வலுத்துள்ளது. கனிமவளத்துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி காலை 8:00 முதல் 10:00 மணி, மாலை 4:00 முதல் 5:30 மணி வரை லாரிகள் செல்லாத வகையில் உத்தர விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.