ஹே எப்புடறா! 500 ரூபாய் நோட்டை 20 ரூபாயாக மாற்றிய ரயில்வே பணியாளர் – ஜாக்கிரதை மக்களே!

பொது இடத்தில் ரூ. 2000, ரூ. 500 என பெருந்தொகையை செலவழிக்கும், நம் வீட்டு பெரியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். அவர்களின் அதி ஜாக்கிரதையை கண்டு, உங்களில் பலரும் சிறுவயதில் எச்சரிலடைந்திருக்கலாம். 

ஆனால், அத்தைகய தொகையை கையாலும் நிலைமைக்கு நீங்கள் வந்த பின்னர், அவர்களின் எண்ணோவோட்டம் உங்களுக்கு புரியவரும். ஏனென்றால், எப்போது வேண்டுமென்றாலும் உங்களிடம் இருந்து அது திருடப்படலாம் அல்லது ஏமாற்றப்படலாம் என்பது உங்களுக்கு தெரியவரும். எனவே, அவ்வளவு பெரிய தொகையை கையாலும்போது, கூடுதல் கவனத்துடன் செயல்பட முனைவீர்கள். 

இருப்பினும், சில நேரங்களில் நம்மை ஏமாற்றுபவர்களின் சாமர்த்தியம் உங்கள் கவனத்தையே சீர்குலைத்துவிடும். அந்த வகையில்தான், தற்போது வைரலாகி வரும் ரயில்வே பணியாளரின் ஏமாற்று வித்தை அமைந்துள்ளது. 

வைரலாகி வரும் அந்த வீடியோ, டெல்லி ஹஸ்ரட் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், குவாலியர் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலுக்கு டிக்கெட் தரும்படி பயணி ஒருவர் 500 ரூபாய் கொடுத்து, டிக்கெட் கவுண்டரில் உள்ள பணியாளரிடம் கேட்கிறார். அந்த 500 ரூபாயை வாங்கிக்கொள்ளும் பணியாளர், கண்ணிமைக்கும் நேரத்தில், வலது கையில் இருந்த 500 ரூபாயை கீழே போட்டு, இடது கையில் வைத்திருந்த 20 ரூபாயை அந்த கைக்கு மாற்றினார். 

தொடர்ந்து, குவாலியர் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலுக்கு 125 ரூபாய் என்றும், கூடுதல் பணம் தரும்படியும் அந்த பயணியிடம் கேட்கிறார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ட்விட்டரில் @Railwhispers என்ற பயனர் நேற்று முன்தினம் (நவ. 25) இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஹசரட் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில், கடந்த செவ்வாய்கிழமை (நவ. 22) அன்று இச்சம்பவம் நடந்துள்ளது என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் அதில் டேக் செய்து புகார் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வடக்கு ரயில்வேயின் டெல்லி கோட்ட மேலாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக  நேற்று முன்தினமே ரயில்வே துறை சார்பாக ட்விட்டரில் பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த பணியாளரை கண்டறிந்து அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ரயில்வே கோட்ட மேலாளார் தரப்பில் ட்விட்டரில் பதிலளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.