ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் என்ன? – அமைச்சர் எஸ். ரகுபதி.!

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

“இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் மற்றும் ஒழுங்குமுறைபடுத்துதலுக்க்கான அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது. 

இந்த அவசர சட்டத்திற்கு தமிழகத்தின் கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த கடிதத்திற்கும் தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது. இந்நிலையில், நேற்று மாலைக்குள் கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 

இதை தெளிவுபடுத்துவதற்கு தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. தமிழக அரசு ஆன்லைன் தடை சட்டம் பற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக விளக்கியுள்ளது. தமிழகத்தில் 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. 

அதைதான் தமிழக அரசு ஒரு சட்டமாக இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். இந்த விவகாரத்தில் காலதாமதம் செய்வதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் செய்கிறார் என்பது அவருக்கு தான் தெரியும்” என்று அவர்  தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.