ஆவடி: திருடிய வீட்டின் உரிமையாளரிடமே லிஃப்ட் – சிக்கிய வடமாநில நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி அருகில் வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் காலையிலேயே தனது வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து, இவர் மனைவி குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதையெல்லாம் வடமாநில நபர் ஒருவர் அந்தப் பகுதியில் நின்றுகொண்டு நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அந்த நபர், ஜெகன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கே பீரோவை உடைத்து உள்ளே இருந்த ஏழு சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு வெளியே வந்துள்ளார். சாலையில் நடந்து செல்லும்போது, அந்த பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஜெகனிடமே லிஃப்ட் கேட்டுச் சென்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் ஜெகனின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர் வீட்டில் திருட்டுப் போன தகவல் தெரியவந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த ஜெகன், அந்த வடமாநில நபரிடம் விசாரணை செய்திருக்கிறார். அவரை சோதனை செய்தபோது, அவர்தான் வீட்டிலிருந்த நகைகளைத் திருடியது தெரியவந்தது. ஜெகன் சத்தம் போடவும், அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது.

சிக்கிய திருடன்

ஊர் பொதுமக்கள் அந்த திருடனைக் கம்பத்தில் கட்டிவைத்து நையப்புடைத்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அந்த திருடனை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.