சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் வசிக்கும் இல்லத்துக்கு வந்து, முதல்வருக்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் வாழ்த்தினர். அங்கிருந்து, மெரினா கடற்கரைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு அண்ணா, கருணாநிதி நினை விடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.ஆர்.பெரியகருப்பன், சேகர்பாபு, பி.மூர்த்தி, செஞ்சி மஸ்தான், எம்எல்ஏ தாயகம் கவி, மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, வேப்பேரி பெரியார் திடலுக்கு சென்ற உதயநிதி, பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர், கோபாலபுரம் சென்று, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், 62-வது வார்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பம்பிங் ஸ்டேஷன் குடியிருப்புக்கு சென்று, அங்கு இலவச மருத்துவ முகாம், மே தினப் பூங்காவில் நாற்றுப்பண்ணையை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ராயப்பேட்டை மருத்துவமனையில் ரத்த வங்கிக்கு தேவையான படுக்கை, உபகரணங்களை வழங்கிய உதயநிதி, மாவட்ட இளைஞரணி சார்பில் சேப்பாக்கம் வி.ஆர்.பிள்ளை தெரு சமூக நலக் கூடத்தில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.

அவரது இல்லத்தில் நேற்று வாழ்த்து பெற்றார். உடன் துர்கா ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர்.
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு தங்கமோதிரம் வழங்கினார். இதுதவிர, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மெரினா கடற்கரையில் படகுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. சிந்தாதிரிப்பேட்டையில் மருத்துவ முகாமை தொடங்கிவைத்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திமுக இளைஞரணி செயலாளராக என்னை மீண்டும் தேர்வு செய்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. தொகுதி மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
இன்னும் நிறைய பணி செய்ய வேண்டியுள்ளது. 234 தொகுதிகளிலும் பாசறை கூட்டம் நடத்தியுள்ளோம். தொடர்ந்து, ஒன்றியம், கிளை அளவில் நடத்த உள்ளோம்’’ என்றார்.‘‘அடுத்து உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா?’’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இதுகுறித்து முதல்வர் முடிவெடுப்பார்’’ என்றார்.