ஊரடங்குக்கு எதிராக சீனாவில் போராட்டம் அதிபர் ஜிங்பிங் பதவி விலக வலியுறுத்தல்| Dinamalar

பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று பரவல் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அரசின் கடுமையான தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு விதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

அதிபர் ஜிங்பிங் பதவி விலக வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது. நாடு முழுதும் கடும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

தொற்று பாதித்த பகுதிகளில் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வராதபடி அடைக்கப்படுகின்றனர்.

அரசுக்கு எதிராக குரல்

ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்குயி என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி அடைக்கப்பட்டு இருந்ததால் தான் உயிரிழப்பு நேர்ந்ததாக மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஊரடங்கு நடவடிக்கையை எதிர்த்து உரும்குயி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைகளில் மக்கள் திரண்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், ஷாங்காயிலும் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சாலையில் திரண்டனர்.

அதிபர் பதவியிலிருந்து ஜிங்பிங் விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பல்வேறு பல்கலைகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

தலைநகர் பீஜிங்கில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நேற்று ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அங்கும் ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, பொது மக்களும், பல்கலை மாணவர்களும் கைகளில் வெள்ளை தாள்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்குதல்

அரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தால், கைது நடவடிக்கைக்கு ஆளாக நேரும் என்பதால், இந்த புதிய உத்தியை சீன மக்கள் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் அரசின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை எதிர்த்து, 1989ல் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பீஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, சீன ராணுவம் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியது.

இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.

அதுபோன்ற போராட்டம் தற்போதும் ஏற்படுமோ என, சீன ஆட்சியாளர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.