குஜராத்தில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம்; காங்கிரசின் வாக்கு வங்கி தீவிரவாதம் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

அகமதாபாத்: குஜராத்தில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ‘தீவிரவாதம்தான் காங்கிரசின் வாக்கு வங்கி’ என்று பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுதால், மூன்று கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் போட்டி போட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில், இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் கட்சி தலைவர்கள் இறங்கி உள்ளனர். பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று குஜராத் வந்தனர். சூரத் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கெடா, நெட்ராங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: குஜராத் நீண்டகாலமாக தீவிரவாதத்தின் இலக்காக உள்ளது. சூரத் மற்றும் அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் குஜராத் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் இருந்தது. தீவிரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும்படி நாங்கள் அவர்களிடம் கேட்டோம். மாறாக அவர்கள் என்னை குறிவைத்தனர். தீவிரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, காங்கிரசின்  அரசியலும் மாறவில்லை. அமைதிப்படுத்தும் அரசியல் தொடரும் வரை தீவிரவாதத்தின்  பயம் இருக்கும். காங்கிரஸ் தீவிரவாத்தை வாக்கு வங்கியில் இருந்து  பார்க்கிறது. காங்கிரஸ் மட்டுமல்ல, அதே எண்ணம் கொண்ட பல கட்சிகளும் இப்போது  வந்துள்ளன. அவர்கள் பயங்கரவாதத்தை வெற்றிக்கான குறுக்குவழியாகக்  கருதுகிறார்கள்.

இந்த சிறிய கட்சியின் அதிகாரப் பசி இன்னும் பெரியது. பெரிய  பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும் போது இந்தக் கட்சிகளின் வாய்கள்  பூட்டிக் கிடக்கின்றன. அதனால் தங்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படக் கூடாது என நினைக்கின்றனர்.  தீவிரவாதிகளைக் காப்பாற்ற அவர்கள் பின்வாசலில் இருந்து நீதிமன்றங்களுக்குச்  செல்கிறார்கள். பட்லா ஹவுஸ் என்கவுன்டர் நடந்தபோது, ​​ஒரு காங்கிரஸ்  தலைவர் தீவிரவாதிகளுக்காக அழுதார். குஜராத் மற்றும் நாடு இதுபோன்ற  கட்சிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2014ல் உங்கள் ஒரு வாக்கு நாட்டில் தீவிரவாதத்தைக் கொல்வதில் நிறைய மாற்றங்களை உருவாக்கி உள்ளது.

எல்லைகளைத் தாக்குவதற்கு முன்பு தீவிரவாதிகள் நிறைய சிந்திக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை சந்தேகிக்கிறது. நாட்டில் பழங்குடியின சமூகத்தின் மீது காங்கிரசுக்கு எந்த மரியாதையும்  இல்லை. பழங்குடியினத்தை சேர்ந்தவரை நாட்டின் ஜனாதிபதியாக்க  முடிவு செய்தோம். அவரது வேட்புமனுவை ஆதரிக்காமல் காங்கிரஸ் எதிர்த்தது. நாங்கள் எங்கள்  முழு பலத்தையும் கொடுத்து பழங்குடியின மகளை தேர்தலில் வெற்றிபெறச்  செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.