சாப்பாட்டுக்கு பணமில்லை… பசியால் கதறி அழுத 2 வயது மகளை கொன்ற ஐடி ஊழியர்…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கென்டாட்டி என்ற கிராமத்தின் ஏரியில், 2 வயது குழந்தையின் உடல் நேற்று முன்தினம் (நவ. 28) இரவு அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையில் உடலை மீட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில், ஏரிக்கரையோரம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு நீல நில கார் ஒன்றும் இருந்துள்ளதை பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் ஒருவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.

அவர் குஜராத்தை சேர்ந்த ராகுல் பர்மர் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி பாவ்யாவுடன் கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்தது தனது குழந்தைதான் என்றும், அதை கொன்றது அவர்தான் என்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 

மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில்,”நானும் எனது மகளும் அந்த ஏரிக்கு காரில்தான் வந்தோம். காரில் அவளுடன் அதிக நேரத்தை செலவிட்டேன். அவளுடன் விளையாடினேன். அவளை மனமார கட்டியணைத்து கனமனத்துடன் அவளுக்கு பிரியாவிடை கொடுத்தேன். அவளுக்கு உணவளிக்க கூட என்னிடம் பணம் இல்லை. எனவே, எனது மகளை நானே கொன்றுவிட்டேன்” என கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி, ஐடி ஊழியரான ராகுல் கடந்த 6 மாதங்களாக வேலையில்லாமல் சிரமப்பட்டுள்ளார் என்றும் பிட்காயின் வணிகத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்து மிகப்பெரும் நிதி நெருக்கடியிலும் சிக்கியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. 

பர்மர் தனது வீட்டில் தங்க நகைகள் திருடுபோய்விட்டதாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, காவல் நிலையத்துக்குச் சென்று அதுகுறித்து விசாரிப்பதை வழக்கமாகவும் வைத்துள்ளார். அவரின் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, வீட்டில் இருந்த நகைகளை ராகுல்தான் எடுத்துச் சென்று அடகு வைத்தது தெரிய வந்தது. அவர் போலீசில் போலியாக புகார் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், போலீசார் அவரை எச்சரித்து, காவல் நிலையத்திற்கு வரும்படி கூறியுள்ளனர். போலி வழக்குப் பதிவு செய்ததால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் ராகுல் இதுபோன்ற செயலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், கடந்த நவ. 15ஆம் தேதி, தனது கணவரும், மகனும் காணாமல் போய்விட்டதாக ராகுலின் மனைவி பாவ்யா போலீசாரிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.