நீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே வலுக்கும் மோதல்; கடுமையாக சாடிய நீதிபதி.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பு விழாவைக் கூட பிரதமர் நரேந்திரமோடி புறக்கணித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தலைமை நீதிபதி பதவி ஏற்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் கூறி, இது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என விமர்சித்தார். அவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகள் இருப்பதில்லை என்றும் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.

மேலும், நீதிபதிகள் வெளிக்காட்டிக் கொள்வதில்லையே தவிர, மற்றபடி நீதித்துறையில் தீவிரமான அரசியல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது என்றும், இந்தியாவில் மட்டும்தான் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்கிறார்கள் என தெரிவித்த கிரண் ரிஜிஜு, இவ்வாறு கூறுவதால் நீதிபதிகளை தான் விமர்சிப்பதாகக் கருதக் கூடாது என்றும் கொலிஜியம் முறை தனக்கு ஏற்புடையது அல்ல என்ற கருத்தையே கூற விரும்புவதாகவும் குறிப்பிட்டார். சட்ட அமைச்சரின் கருத்து நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரை கடுமையாக சாடினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

நீதிபதி கவுல் கூறும்போது, ‘‘கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளில் ஒன்றிய அரசு ஏறி உட்கார்ந்துள்ளது. மேலும் கொலிஜியம் அமைப்பை அச்சுறுத்துகிறது. நீதிபதிகள் நியமிக்கப்படாவிட்டால், நாட்டில் நீதி அமைப்பு எவ்வாறு செயல்படும். பல பரிந்துரைகள் கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது. நீங்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டீர்கள்.

குஜராத்தில் 5 ரூபாய்க்கு உணவு.. ‘அன்னபூர்ணா கேன்டீன்’… பாஜக தேர்தல் வாக்குறுதி

உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் மரணமடைந்து விட்டார். எனவே நீதி அமைப்பின் உணர்வுகளை ஒன்றிய அரசிடம் விளக்குங்கள். நீதிபதிகள் நியமனம் குறித்த பரிந்துகளில் இனியும் முடிவு எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என கடுமையாக கூறி, வழக்கை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.