சேலம்: “ஆர்எஸ்எஸ், பாஜகவில்தான் மொத்த பயங்கரவாதிகளும் உள்ளனர்” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதனால்தான் இந்த ஆளுநரே நமக்கு அவசியம் இல்லை என்று சொல்வது. அவரது தாமதத்தால், மக்கள் நலன்கருதி எந்தவொரு முடிவும் எடுக்கமுடியாமல் தள்ளிப்போகிறது. முன்பெல்லாம் நம் ஊரில், திண்ணையில் வேலையில்லாத பெரியவர்கள் சீட்டாடுவர். அதையே சூதாட்டம் என்று சொல்லி, சிறைபிடித்துச் சென்று அபராதம் விதித்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனை உயிர்களை இழந்துள்ளோம் என்று பாருங்கள். அதை தடை செய்யுங்கள் என்று சொன்னால், அதை செய்யாமல், அதற்கு கையெழுத்திடுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது. அப்போது மக்கள் நலனில் அக்கறை இல்லையா ஆளுநருக்கு? மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஆட்சி முடிவெடுக்கிறது. மக்கள் நலன் சார்ந்து ஒரு அரசு முடிவெடுக்கிறது என்றால், மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் அதற்கு கையெழுத்திடாமல், தடுப்பது என்ன ஒரு கொடுமை என்று பாருங்கள்.
அப்போது 8 கோடி மக்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது. இதில் எங்கு மக்களாட்சி இருக்கிறது, எங்கே ஜனநாயகம் இருக்கிறது?” என்றார்.
அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக தவறான பாதையில் செல்வதாக கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அவர்கள் 9 வருடம் சரியான பாதையில் சென்றார்களா? திமுக சரியான பாதையில் போகவில்லை. அதை நாங்கள் கேட்கிறோம். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த 9 ஆண்டுகளில் எதில் பாஜக சரியாக சென்றுள்ளது. அனைத்து துறைகளையும் தனியார் வசம் ஒப்படைத்ததைத் தவிர வேறு என்ன வேலை செய்துள்ளது.
பாஜக மக்களை எப்போதும் பதற்றத்தில் வைத்திருந்தது. நீட், சிஐஏ, என்ஐஏ, ஆதார் எண்ணை இணைத்தல், எல்லாமே ஆதார்தான் என்றால், குடியுரிமை சான்றிதழ் ஏன் கேட்கிறீர்கள்? பாஜக ஆளுகின்ற மற்ற மாநிலங்கள் எல்லாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறதா?” என்று அவர் வினவினார்.
தொடர்ந்து அவரிடம், வாக்குவங்கிக்காக காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக குஜராத்தில் மோடி பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “பாஜகவை காங்கிரஸ் ஒன்றும் ஆதரிக்கவில்லையே. ஆர்எஸ்எஸ், பாஜகவில்தான் மொத்த பயங்கரவாதிகளும் உள்ளனர். அவர்களை காங்கிரஸ் ஆதரித்ததாக தெரியவில்லையே” என்று அவர் கூறியுள்ளார்.