கோவை மாவட்டத்திலுள்ள போத்தனூர் அருகே சிவன்மலை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ரங்கன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி கோகிலாவுடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஏழு வயதில் ஒரு மகள் இருக்கின்றார்.
கோகிலா அங்கிருக்கும் மரக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். மது அருந்தும் பழக்கத்திற்கு ரங்கன் அடிமையாக இருந்து வந்துள்ளார். அன்றாடம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கோகிலாவுடன் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சம்பவ தினத்தில் மது அருந்திவிட்டு நல்ல போதையில் ரங்கன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இதை கோகிலா தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முடிந்து ரங்கன் உறங்கிவிட ஆத்திரத்தில் இருந்த கோகிலா அவரை கொலை செய்துவிட்டு நிம்மதியாக இருந்து விடலாம் என்று முடிவு எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டில் கிடந்த கருங்கல்லை எடுத்து ரங்கன் தலையில் போட்டு இருக்கிறார். அப்போது வலி தாங்காமல் ரங்கன் அலறி துடிக்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதன் பேரில் கோகிலா கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை இறந்த விட, தாயும் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த 7 வயது பெண் குழந்தை பரிதாபமாக நிற்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.