மதுரை: ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கக்கோரிய வழக்கில் திருச்சி மாநகராட்சி ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் டிச. 1-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. தமிழகத்தில் பழமையான கோயில்களில் கோயில் கோபுரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என அரசாணை உள்ளது. இந்த அரசாணையை மீறி ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு கோயிலிலிருந்து நூறு மீட்டருக்குள் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் கோயில் அருகே உத்தர வீதி, சித்திரை வீதிகளில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், கோயில் அருகே 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என விதியிருக்கும் போது, விதிகளை மீறி கட்டிடம் கட்டும் வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்? இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர், திருச்சி மாவட்ட நகர திட்டமிடல் இணை இயக்குனர், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச. 1-க்கு ஒத்திவைத்தனர்.