சென்னை: சென்னை – திண்டுக்கல் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ என்கிற அளவில் அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் கொல்லம், திருவனந்தபுரம் என்று கேரளாவிற்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்த வழித்தடத்தில் தினசரி 10-க்கு மேற்பட்ட வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை – திண்டுக்கல் வழித்தடத்தில் 110 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சென்னை – மதுரை இடையே தேஜஸ் ரயில் மற்றும் வைகை விரைவு ரயில்கள் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை – திண்டுக்கல் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ அதிகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரக்கோணம் – ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை – போத்தனூர், சென்னை – திண்டுக்கல் உள்ளிட்ட வழித்தடங்களின் வேகத்தை 110 கி.மீட்டரில் இருந்து 130 கி.மீ ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் அரக்கோணம் – செங்கல்பட்டு, நெல்லை – திருச்செந்தூர், தாம்பரம் – செங்கல்பட்டு, நெல்லை – தென்காசி, சேலம் – கரூர் – நாமக்கல் , கடலூர் துறைமுகம் – விருத்தாசலம், திண்டுக்கல் – பொள்ளாச்சி, மதுரை – வாஞ்சி மணியாச்சி ஆகிய வழித்தடங்களில் வேகத்தில் அளவை 110 கி.மீட்டராக உயர்த்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.