நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்.பியும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆ.ராசா மீதான இந்த குற்றச்சாட்டு மீது கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக சிபிஐ விசாரணை செய்து வந்தது. இந்த விசாரணை முடிவில் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மீது கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ தாக்கல் செய்த அந்த குற்ற பத்திரிக்கையில் ஆ.ராசா மீது குற்றம் சாட்டப்பட்ட அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 579% அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி எம்.எல்.ஏக்கள் எதிரான வழக்குகளை விசாரிக்க கூடிய சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆ.ராசாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சிவகுமார் குற்றச்சாட்டப்பட்ட ஆ.ராசா உட்பட அனைவருக்கும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.