பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க பள்ளிகளில் உள்புகார் விசாரணை குழு; ஐகோர்ட் மதுரை கிளை கருத்து

மதுரை: பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க, பள்ளிகளில் உள்புகார் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வெரோனிகா மேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஒரு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமூகத்தில் ஏராளமான தீமைகள் நிலவுகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களும் இதில் ஒன்று தான். இதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கத்தான் சட்டங்கள் இயற்றப்பட்டன. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைகளின் பாதுகாப்பிற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.
 
குழந்தைகளுக்கு எதிரானதும், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் தயக்கமின்றி புகார் அளித்திடும் வகையில் 14417 என்ற இலவச ஹெல்ப்லைன் எண் பள்ளி பாடப்புத்தகங்களில் அச்சிடப்படும் என்றும், இந்த அழைப்புகளை முறையாக கையாண்டு தீர்வு காண குழுவும் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதேநேரம் நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் செயல்படாததை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியம். எனவே, பள்ளிகளில் நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு குழந்தையின் கண்ணியம் மற்றும் அவரது ஆளுமையின் மீது தாக்குதலை நடத்தி வளர்ச்சியை தடுப்பதாகும். அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்களை முழுமையாக அமல்படுத்திடும் வகையில் சில வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றம் வழங்குகிறது.

குழந்தைகளின் பாதுகாப்பை பள்ளி கல்வித்துறை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து உறுதி செய்ய வேண்டும். பணியிடங்களில் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து பள்ளிகளிலும் உள் புகார் விசாரணை குழுவை அமைக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழாத வகையில், அதற்கென தனி கொள்கைகளை உருவாக்கி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த வேண்டும். இக்குழு நடமாடும் மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.